ஈராக்கில் இரத்தம் குடித்து வந்த அமெரிக்க அரக்கர்கள் இம்மாத இறுதிக்குள் ஈராக்கை விட்டும் வெளியேறுகின்றனர். சதாம் ஹுஸைனிடம் பேரழிவு ஆயுதங்கள் இருக்கின்றன என்ற பொய்யைச் சொல்லி 2003 இல் ஈராக் மீதான போரைத் துவக்கியவர்கள் ஒன்பது ஆண்டு கொடூரத்திற்குப் பின்னர் வெளியேறுகின்றனர்.
இலங்கையில் இறுதிக்கட்டப் போரின் போது இடம் பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள், யுத்த குற்றங்கள் குறித்து விசாரணை வேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். ஈராக்கிற்கு எதிரான போர், அங்கே மீறப்பட்ட யுத்த தர்மங்கள், மனித உரிமை மீறல்கள், கற்பழிப்புக்கள், கைதிகள் மீதான சித்திரவதைகள், வன்முறைகள், மத நிந்தனைகள் குறித்தெல்லாம் நியாயமான விசாரணை வேண்டும் என்று யாராவது அழுத்தம் கொடுப்பார்களா? இலங்கைக்கு ஒரு நீதி! அமெரிக்காவுக்கு வேறொரு நீதியா?
செப்டம்பர் 11 தாக்குதலை அல்-கைதாதான் செய்ததென்று எத்தகைய ஆதாரமும் இல்லாமல் கூறி ஆப்கான் மீதான போரை அமெரிக்கா ஆரம்பித்தது. அதற்குப் பாகிஸ்தான் பெரிதும் உதவியது. இப்படி உதவாவிட்டால் பாகிஸ்தான் என்றொரு நாடு இருந்ததே தெரியாமல் போய்விடும் என அப்போதைய அதிபர் கூறினார். ஆனால் இப்போது பாகிஸ்தானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான முறுகல் உச்ச கட்டத்திற்கு வந்துள்ளது.
நவம்பர் 26 ஆம் திகதி அமெரிக்க ஆளில்லா விமானங்கள் நடாத்திய தாக்குதலில் 24 பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இது பாகிஸ்தானில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் கூட இந் நிகழ்ச்சிக்கெதிராக ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. அமெரிக்கா பாகிஸ்தான் வீரர்களைக் குறிவைத்துக் கொன்ற முதல் சம்பவம் அல்ல இது! இருப்பினும் அமெரிக்க, பாகிஸ்தான் உறவில் விரிசல் விழும் சந்தர்ப்பத்தில் இது நடந்துள்ளது. இது தவறுதலாக நடந்தது என அமெரிக்கா கூறினாலும் இது முன்கூட்டியே திட்டமிட்ட செயல் என பாகிஸ்தான் சிரேஷ;ட இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் அஸ்பெக் நதீம் குறிப்பிட்டுள்ளார்.
இந் நிகழ்ச்சியின் பின்னர் பயங்கரவாதத்திற்கு எதிரான போருக்காக அமெரிக்கா பயன்படுத்தி வந்த ‘ஷhம்சி’ விமான நிலையத்திலிருந்து டிசம்பர் 11 ஆம் திகதிக்கு முன்னர் வெளியேறுமாறு பாகிஸ்தான் அமெரிக்காவுக்கு உத்தரவிட்டது. இதனால் அமெரிக்கா தனது விமானங்களை ஆப்கானிஸ்தானுக்கு இடம் மாற்றியது.
பாகிஸ்தான் பிரதமர் ‘யூசுப் ரசா கிலானி’ அவர்கள் நேட்டோ படைகள் பாகிஸ்தான் வான்பரப்பைப் பயன்படுத்துவது தடுக்கப்படும் என்றும், தரைப் பகுதியைப் பயன்படுத்துவதையும் தடுக்கும் எண்ணம் உள்ளது என்றும் கூறியுள்ளார்.
தனது இராணுவ வீரர்களுக்குப் பாதிப்பு என்றதும் குமுறுகிற இவர்கள் ஆப்கானுக்கு எதிரான போரின் போதும் இதே துணிவுடன் இருந்திருந்தால் ஆப்கானின் அழிவுக்குத் துணை போன குற்றத்திலிருந்து தப்பித்திருக்கலாம்.
பாகிஸ்தான் தரப்பில் இவ்வாறு இறுக்கமான நிலை நீடிக்கும் அதே நேரம் அமெரிக்கா தனது ஆளில்லா விமானத் தாக்குதல்களை தற்காலிகமாக இடை நிறுத்தியுள்ள அதே வேளை பாகிஸ்தானுக்கு வழங்கி வரும் நிதியுதவிகளையும் நிறுத்துவது குறித்து ஆலோசித்து வருகின்றது.
இதே வேளை பாகிஸ்தானுடன் பகைத்துக் கொள்ளும் நிலையில் தலிபான்களுடன் உறவை வளர்க்க அமெரிக்கா முயல்வதாக அறிய முடிகின்றது. அமெரிக்காவின் துணை ஜனாதிபதி ‘தலிபான்கள் அமெரிக்காவின் எதிரிகள் அல்லர்’ என்று டூயேட் பாட ஆரம்பித்துள்ளார். அமெரிக்காவின் நயவஞ்சகத்தனத்திற்கு இது சிறந்த எடுத்துக்காட்டாகும்.
ஈராக், ஈரான் போரின் போது சதாமுக்கு உதவி செய்த அமெரிக்கா சதாமையே பின்னர் அழித்தது. ஆப்கான், ரஷ;யா போரின் போது ஆப்கானுக்கு உதவிளூ உஸாமாவை வளர்த்த அமெரிக்கா உஸாமாவையும், தலிபானையும் அழித்தது. ஆப்கான் போருக்கு உதவிய பாகிஸ்தானுடன் இப்போது பகைமையை வளர்த்து வருகின்றது. அமெரிக்காவுடன் நட்புறவு கொண்டுள்ள நாடுகள், தாம் ஒரு நயவஞ்சகனுடன்தான் நட்புறவு பாராட்டுகின்றோம் என்ற தெளிவினைப் பெறுவது அவசியமாகும்.
அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் நடாத்திய தாக்குதல் இப்படியொரு கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கும் இதே வேளை, அமெரிக்கா தனது ஆளில்லா உளவு விமானம் ஒன்றை ஈரானிடம் இழந்து அவமான முத்திரையை முகத்தில் குத்திக் கொண்டுள்ளது.
RQ-170 உளவு விமானம் CIA இனால் உஸாமாவை உளவு பார்ப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் நிறைந்த விமானமாகும். இதன்படத்தைக் கூட அமெரிக்கா இரகசியமாக வைத்திருந்தது. இந்த விமானம் ஈரான் எல்லைக்குள் ஊடுருவியது! அதனை ஈரான் வெற்றிகரமாகத் தரையிறக்கி தம்வசப்படுத்தியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி தமது விமானம் ஈரானில் விழுந்துவிட்டது. அவர்கள் தர மறுக்கின்றனர் என ஒப்பாரி வைத்துள்ளார். ஆனால் விமானத்திற்கும், அமெரிக்க கட்டுப்பாட்டு நிலையத்திற்குமான நுன் அலைத் தொடர்பை துண்டித்த ஈரான் அதன் கட்டுப்பாட்டை தன்வசப்படுத்தி விமானத்தை இறக்கியுள்ளது. இந்தக் காட்சிகளை தற்போது இணையத்தில் வெளியிட்டுமுள்ளது.
இது அமெரிக்காவுக்கு மிகப்பெரும் அவமானமாகும். அதனை ஈரான் இறக்கியது என்று கூறாமல் ‘விழுந்தது’ என்று கூறி அசடு வழிகின்றது.
இதனைப் பார்வையிட்ட ஈரான் அதிகாரிகள் ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் உள்ள தொழில்நுட்ப இடைவெளி மிகக் குறைவானதுதான் என்று கூறியுள்ளனர்.
இந்த விமானத்தை ஆய்வு செய்து இதனைவிட நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய விமானத்தை தயார் செய்யவும் ஈரான் முனைந்து வருகின்றது. தடியைக் கொடுத்து அடி வாங்குவது என்று இதைத்தான் கூறுவார்கள்.
ஒவ்வொரு முஸ்லிம் நாடும் தனது இராணுவ மற்றும் தொழில்நுட்பத் துறையை வளர்த்துக் கொண்டு, மற்ற முஸ்லிம் நாடுகள் தாக்கப்படுவதற்கு துணை போகாமல், தமக்குள் குடி கொண்டுள்ள தேசியவாத உணர்வுகளைக் குழி தோண்டிப் புதைத்தால் யுத்த வெறி பிடித்து ரத்தம் குடித்து வரும் அமெரிக்கப் பேயை அடக்கலாம்.