அழைப்பாளர்களுக்கு – குத்பா

ஒருவர் உரை நிகழ்த்தும் முன்னர் அல்லது குத்பாவுக்காக மிம்பரில் ஏறுவதற்கு முன்னர் சில தனிப்பட்ட நபர்கள் வந்து இன்றைய குத்பாவில் இதைப் பற்றிச் சொல்லுங்கள், அதைப் பற்றிச் சொல்லுங்கள் எனக் காதைக் கடிப்பார்கள். சில வேளை அது அவரது தனிப்பட்ட கோப தாபத்தைத் தீர்ப்பதற்காக விடப்படும் கோரிக்கையாகவும் இருக்கலாம். எனவே, ஒரு கதீப் நிதானமான நிலைப்பாட்டில் இருக்க வேண்டும். அடுத்தவர்கள் உசுப்பேற்றுவதற்காக வெல்லாம் உச்சிக் கொப்பில் ஏறி நின்று குதிக்கக் கூடாது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், நிர்வாகிகள் தரும் தலைப்புக்குள் உரைகளை அமைத்துக் கொள்வதே பொருத்தமானதாகும்.
சிலர் நிர்வாகத்துடன் உள்ள கோபத்தைத் தீர்த்துக் கொள்வதற்காகவும் கூட இப்படி வரக்கூடிய உலமாக்களைப் பகடைக் காய்களாகப் பயன்படுத்துவதுண்டு.
நான் மத்ரஸாவில் இருந்து வெளியேறிய புதிதில் ஒரு பள்ளிக்கு பயான் நிகழ்ச்சிக்குச் சென்றேன். அது ஒரு பொதுப் பள்ளி. அப்போது அங்கிருந்த ஒரு தௌஹீத்வாதி பயானில் இடை நடுவில் தஃலீம் தொகுப்பில் வரும் செய்திகளையெல்லாம் போட்டு உடைக்க வேண்டும். அப்போதுதான் மக்கள் இன்ட்ரஸ்ட்டாகக் கேட்பார்கள். இல்லாவிட்டால் அடுத்த முறை உங்களை பயானுக்குக் கூப்பிட மாட்டார்கள் என்று சொன்னார். நான் காதில் வாங்கிக் கொண்டேன். கல்பில் போட்டுக் கொள்ளவில்லை.
பின்னர் அந்தப் பள்ளி எம்மிடமிருந்து பறிபோய்விட்டது. அதன் பின்னர் தஃவா சம்பந்தமான கூட்டம் ஒன்று நடந்தது. அந்தக் கூட்டத்தில் எனக்கு தப்லீஃ தஃலீம் தொகுப்பு சம்பவங்களை எடுத்துப் போட்டு பேசச் சொன்னவர் அழுத குரலில் ஒரு கருத்தைச் சொன்னார்.
நாம் பேசும் போது நல்ல முறையில் பேச வேண்டும். அடுத்தவர்களைத் தாக்கக் கூடாது. ஒரு மௌலவி அடுத்த ஜமாஅத் உலமாக்கள் பற்றி பள்ளியில் பேசும் போது அவர்கள் உலமாக்கள் அல்ல உண்ணும் மாக்கள்அதாவது, சோத்துமாடுகள் என்று கூறினார். இப்படி உலமாக்கள் பேசினால் எப்படி தஃவா வளரும் என்று அவர் கேட்டார். இவர் சொன்னதைக் கேட்டு அன்று நான் பேசியிருந்தால் என்னைக் குறித்தும் இப்படித்தான் சொல்லியிருப்பார். எனவே, பாமரர்கள் உசுப்பேத்தினால் உசுப்பேறும் நிலை நல்ல தாஈக்களிடம் இருக்கலாகாது.
தலைப்பைத் தேர்ந்தெடுத்தல்:
உரைக்குத் தயாராவதை விட என்ன தலைப்பில் உரை நிகழ்த்துவதென்பது சிக்கலான, குழப்பமான ஒன்றாகும். தலைப்பை நிர்வாகிகளே தந்துவிட்டால் மிகவும் இலகுவாக அமைந்துவிடும். சிலர் தலைப்பு தரும் விடயத்தில் கூட ஏடாகூடமாக நடந்து கொள்வர். அவர்கள் தரும் தலைப்பு இடத்துக்கும் உரை நிகழ்த்தப்படும் சமூகத்திற்கும் பொருத்தமற்றது எனக் கண்டால் அது குறித்து நிர்வாகிகளிடம் பேசி உரிய தலைப்பைத் தெரிந்தெடுத்து உரையாற்ற வேண்டும்.
நல்ல மொழியில் அமையட்டும்:
முஸ்லிம்களின் உரைகள் இன்று தொலைக்காட்சி, வானொலிகளில் ஒலிபரப்புச் செய்யப்படுகின்றது. அந்த மொழிநடை மிகவும் தரம் குன்றியதாக அமைந்துவிடுகின்றது. குறிப்பாக சில ஜமாஅத் உலமாக்களின் உரைகள் கொச்சைத் தமிழில் அமைந்து விடுகின்றது. மற்றும் சிலர் நல்ல நடையில் பேசுகின்றேன் என மக்களுக்குப் புரியாத பாiஷயில் பேசிவிட்டுச் சென்றுவிடுகின்றனர். மொழியைக் கொச்சைப்படுத்தி முஸ்லிம் களுக்கு தமிழ் தெரியாது என்ற நிலையையும் ஏற்படுத்திவிடாமல் தமிழ்ப் புலமையைக் காட்டச் சென்று கருத்தே விளங்காத சூனிய நிலையில் மக்களை விட்டு விடாமல் நடுநிலையான பாiஷயில் மக்களுக்கு உரையாற்றுங்கள்.
பிரதி பண்ணாதீர்கள்:
சிலர் பிரபலமான பேச்சாளர்களின் பேச்சைப் போல் பேச முற்படுவார்கள். இது கோமாளித்தனமாகிவிடும். கடந்த கால வானொலிப் பேச்சாளர்களில் சிலர் மஸூத் ஆலிமையும் மற்றும் சிலர் நியாஸ் மௌலவியையும், தவ்ஹீத் உலமாக்களில் சிலர் சகோதரர் PJ-யையும் போன்று பேச முயற்சிப்பது கேட்பவர்கள் மனதில் பேசுபவர் பற்றிய மரியாதையைக் குறைத்து விடும். இலங்கை உலமாக்கள் இந்திய பாணியில் தமிழையும் ஆங்கிலத்தையும் உச்சரிப்பது இன்னும் கொஞ்சம் கண்ணியத்தைக் குறைப்பதாக அமைந்து விடும். எனவே, அடுத்த அறிஞர்களிடமிருந்து இல்மைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
நீங்கள் நீங்களாக நின்று உரை நிகழ்த்துங்கள். அன்னத்தைப் போன்று நடக்க முயன்ற காகம் தன்னடையை மறந்ததாம்!என மக்கள் சொல்லும் நிலையை எற்படுத்திக் கொள்hதீர்கள்.
வரலாறும் அன்றாட உலக நிலைவரமும்:
பேச்சாளர்கள் வரலாற்று அறிவு உள்ளவர்களாக இருந்தால் தமது உரையுடன் வரலாறுகளையும் தகுந்தாற்போல் இணைத்துக் கொண்டால் அந்த உரை மக்களால் வரவேற்கப்படும். மக்கள் மனங்களில் நீண்ட காலம் நின்று நிலைக்கும். இவ்வாறே உலக நடப்புக்களை உதாரணமாக வைத்து உரை நிகழ்த்தினால் அதுவும் மக்கள் மனதில் விரைவாகப் பதிந்துவிடும். எனவே, வரலாற்று நூல்களை அதிகமதிகம் வாசிக்க வேண்டும். உலக நடப்புக்கள் குறித்த தகவல்களையும் சேர்த்துப் படித்து மனதில் பதிந்து கொண்டால் மக்கள் மனதில் இடம் பிடிக்கும் வண்ணம் உரைகளை அமைத்துக் கொள்ளலாம்.
மென்மையான தொனியில்:
கனி இருக்க காய் கவர்தல் ஏன்?” என்று கேட்பார்கள். நல்ல கனிந்த பழம் இருக்கும் போது காயைப் பறிக்க வேண்டியதில்லை. இவ்வாறே இனிய சொல் இருக்க மோசமான சொற்களைப் பயன்படுத்தலாகாது.
“(நபியே!) அல்லாஹ்வின் அருளின் காரணமாகவே நீர் அவர்களுடன் மென்மையாக நடந்து கொள்கிறீர். நீர் கடுகடுப்பானவராகவும், கடின உள்ளம் கொண்டவராகவும் இருந்திருப்பின் அவர்கள் உம்மை விட்டும் விலகிச் சென்றிருப்பார்கள். எனவே, அவர்களை நீர் மன்னித்து, அவர்களுக்காக பாவமன்னிப்புத் தேடி, காரியங்களில் அவர்களுடன் ஆலோசனையும் செய்வீராக! நீர் உறுதியான முடிவுக்கு வந்துவிட்டால் அல்லாஹ்வின் மீது முழுமையாக நம்பிக்கை வைப்பீராக! நிச்சயமாக அல்லாஹ் (தன் மீது) முழுமையாக நம்பிக்கை வைப்போரை நேசிக்கின்றான்.
(3:159)
“(நபியே!) நீர் மன்னிப்பைக் கடைப்பிடித்து, நன்மையை ஏவி, அறிவீனர்களைப் புறக்கணித்து விடுவீராக!
(7:199)
இது போன்ற வசனங்களைக் கருத்திற் கொண்டு எல்லா விடயங்களிலும் நளினத்தைக் கைக்கொள்ளுமாறு இஸ்லாம் கூறியிருப்பதைக் கவனத்திற் கொண்டு பேசும் சொற்களை இனிமையானதாக, இதமானதாக, மென்மையானதாக, கேட்பவர்களின் மனதைப் புண்படுத்தாதவையாக அமைத்துக் கொள்ளுங்கள். அதற்காகச் சத்தியத்தை மறைக்க வேண்டியதில்லை. சத்தியத்தைக் கனிவான, இனிமையான வார்த்தைகளால் முன் வையுங்கள். கரடு முரடான வார்த்தைகளைத் தவிர்த்துவிடுங்கள். நாம் சொல்லும் சத்தியம் இலகுவாக மக்கள் மனங்களில் பதிய இது வாய்ப்பாக அமையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.