இஸ்லாத்தின் பால், சத்தியத்தின் பால் மக்களை அழைக்க வேண்டும் என பலரும் ஆர்வம் கொள்கின்றனர். அல்ஹம்துலில்லாஹ்! இது பாராட்டத்தக்க பண்புதான். தஃவா என்பது குர்ஆனையும் சுன்னாவையும் அடுத்தவர் களுக்குக் கற்றுக் கொடுத்து, நபி(ச) வாழ்ந்து காட்டிய அடிப்படையில் மக்களை வாழப் பழக்குவதாகும். இது மகத்தான பணியாகும். இந்தப் பணியை அல்லாஹ்வுக்குச் செய்யும் உதவியாக குர்ஆன் சிறப்பித்துக் கூறுகின்றது.
இருப்பினும் அனேகமான தாஈகள் அடுத்தவர்களுக்கு இஸ்லாத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும்; தஃவா செய்ய வேண்டும்; என்பதில் காட்டும் ஆர்வத்தில் பத்து சதவீதம் கூட தஃவாவை எப்படிச் செய்ய வேண்டும் என்பதை அறிந்து அதனடிப்படையில் மேற்கொள்வதற்கு வழங்குவதில்லை. தஃவா செய்யும் போது நபி(ச) அவர்கள் கடைப்பிடித்த போக்கு எத்தகையது என்பதை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவதுமில்லை. நபி(ச) அவர்களது முன்மாதிரிப் பிரகாரம் தஃவாவை முன்னெடுப்பதுமில்லை. அவ்வப்போது தமக்கு ஏற்படும் உணர்வுகளுக்கு ஏற்ப தஃவா செய்கின்றனர். இதுதான் இன்று முஸ்லிம் சமூகத்தில் இருக்கும் மிகப் பெரிய குழப்பமாகத் தெரிகின்றது.
அதிகமான வைத்தியர்களே நோயாளி களாக இருக்கின்றனர். சிலர் நோயைத் தெரியாமல் மருந்து கொடுக்கின்றனர். சிலருக்கு நோய் தெரிகின்றது; மருந்து தெரிவதில்லை. மற்றும் பலரும் தப்பிப்பதற்காக மருந்தைக் கொடுக்கின்றனர். சிலர் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய பெரிய பெரிய நோய்களுக்கெல்லாம் பனடோலையும் டிஸ்பிரீனையும் கொடுத்து சமாளிக்கின்றனர். அதற்கெல்லாம் பல வைத்தியர்களே நோய்காரர்களாகத் திரிகின்றனர். இப்படியான இந்தக் களத்தில் எண்ணற்ற குழப்பங்கள், குளறுபடிகள், குற்றம் குறைகள் என குப்பைகள் நிறைந்து காணப்படுகின்றன. எனவே, அழைப்பாளர் களுக்கு என்ற இந்த மகுடத்தில் சில செய்திகளைப் பகிர்ந்து கொள்ள ஆசைப் படுகின்றேன்.
“உங்களில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் நினைவு கூருவோருக்கு அல்லாஹ்வின் தூதரிடம் நிச்சயமாக அழகிய முன் மாதிரி இருக்கின்றது.” (33:21)
இந்த திருமறை வசனம் நபி(ச) அவர்களிடம் அழகிய முன்மாதிரி இருப்பதாகக் கூறுகின்றது. நபி(ச) அவர்களது பணியான
தஃவா வைச் செய்கின்றவர்கள் நபி(ச) அவர்களது முன் மாதிரியை விட்டு விட்டு அந்தப் பணியைச் செய்ய முடியுமா? அப்படிச் செய்தால் அவர்கள் மறுமைiயில் அல்லாஹ்வின் சந்திப்பை ஆசை கொள்பவர்களாக இருக்க முடியுமா?
மென்மையான போக்கு:
“யூதர்கள் நபி(ச) அவர்களிடம் வந்து “அஸ்ஸாமு அலைக்கும்” (உங்கள் மீது மரணம் உண்டாகட்டும்) என (ஸலாம் கூறுவது போல் நடித்துக்) கூறினர். அதற்கு நபி(ச) அவர்கள் “உங்கள் மீதும்” என்றார்கள். இது கேட்ட ஆயிஷா(ரழி) அவர்கள் உங்கள் மீதுதான் அல்லாஹ்வின் சாபமும், கோபமும் உண்டாகட்டும் எனக் கடிந்து கொண்டார்கள். அப்போது நபி(ச) அவர்கள் ஆயிஷா(ரழி) அவர்களைப் பார்த்து ஆயிஷாவே! மென்மையாக நடந்துகொள் எனக் கண்டித்தார்கள். கெட்ட வார்த்தை பேசுவதும், கடுமையாக நடந்து கொள்வதும் கூடாது என்று கூறினார்கள். ஆயிஷா(ரழி) அவர்கள், அவர்கள் என்ன சொன்னார்கள் என்று நீங்கள் கேட்கவில்லையா என்றதும் நபியவர்கள் நான் என்ன சொன்னேன் என்று நீ கேட்கவில்லையா? என்று திருப்பிக் கேட்டார்கள்.” (அறிவிப்பவர்: ஆயிஷh(ரழி), ஆதாரம்: புஹாரி-6024, 6030,6256 முஸ்லிம்: 11, 2165)
யூதர்கள் ஒரு நாட்டின் தலைவரிடம் வந்து அதுவும் அவர் மனைவியின் முன்னிலையிலேயே இப்படி அநாகரீகமாக நடந்தும் கூட நபி(ச) அவர்கள் யூதர்களின் தரத்துக்குத் தாழ்ந்து செல்லவில்லை என்பது ஆழ்ந்து அவதானிக்கத்தக்கதாகும். இஸ்லாம் மென்மையான போக்கை எவ்வளவு அழுத்தமாக வலியுறுத்துகின்றது என்பதற்கு இது தெளிவான சான்றாகும்.
இன்றைய தஃவாக் களத்தில் யார் அடுத்தவர்களை அதிகமாகக் கண்டித்துப் பேசுகின்றாரோ, கிண்டலடித்துப் பேசுகின் றாரோ, கடுமையான தொணியில் எச்சரிக் கின்றாரோ அவர்தான் கொள்கை வாதியாகவும் கொள்கைப் பிடிப்புள்ளவராகவும் பார்க்கப் படுகின்றார்.
மென்மையாக தஃவா செய்ய வேண்டும் எனப் பிரச்சாரம் செய்பவர்களும் தமது அமைப்புக்கு ஆபத்து என்றால் ஆக்ரோஷமடைந்துவிடுகின்றனர். அடிதடியில் இறங்கிவிடுகின்றனர். ஆழ்ந்த அவதானம், தூர நோக்கு என்றெல்லாம் பேசுபவர்களும் அடுத்த சமூகத்திற்குக் காட்டிக் கொடுக்கின்றனர்; மூட்டி விடுகின்றனர் என்றால் தஃவாக் களத்தில் நபி(ச) அவர்களின் அழகிய வழிமுறை முற்று முழுதாகப் புறக்கணிக்கப்படுவதைக் காணலாம். மருந்துக்குப் பதிலாக விஷத்தை வைத்தியர்கள் கொடுத்து வந்தால் எப்படி சமூக நோய்கள் குறையும்? மறையும்? என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
“நபி(ச) அவர்கள் ஏசுபவராகவோ, கெட்ட வார்த்தைகளைப் பேசுபவர்களாகவோ, சபிப்பவராகவோ, இருக்கவில்லை. “
அறிவிப்பவர்: அனஸ்(வ),
ஆதாரம்: புஹாரி-6031
கெட்ட வார்த்தைகளைப் பேசுவது, திட்டுவது, சபிப்பது என்பது நபி வழி அல்ல எனும் போது இந்த வழிமுறை மூலம்தான் நான் தஃவா செய்வேன் என்று கூறுபவர்கள் எப்படி நபி(ச) அவர்களின் தூய பணியான தஃவாவைச் செய்யும் தாயிகளாக இருக்க முடியும் என்று சிந்தித்துப் பாருங்கள்.
நபி(ச) அவர்கள் நன்மையை ஏவுவதாக இருந்தாலும் தீமையைத் தடுப்பதாக இருந்தாலும் நிதானமான போக்கைக் கைக்கொண்டுள்ளார்கள். முடிவு நல்லதாக இருக்க வேண்டும் என்பதில் கரிசனை காட்டியுள்ளார்கள். தனது உணர்ச்சிகளைக் கொப்பளிக்க வேண்டும் என்றோ, கோபத்தில் கொந்தளிக்க வேண்டும் என்றோ அவர்கள் எண்ணியதில்லை.
காட்டறபி ஒருவர் மஸ்ஜிதுன் நபவியில் வந்து சிறுநீர் கழிக்கின்றார். இதைக் கண்ட நபித்தோழர்கள் கோபம் கொண்டு அவரை விரட்ட முற்படுகின்றனர். அவரை விரட்டாதீர்கள்! அவர் சிறுநீர் கழித்த இடத்தில் ஒரு வாளித் தண்ணீரை ஊற்றி விடுங்கள் என்று கூறுகின்றார்கள். அறிவீனம் காரணமாக இப்படி நடந்து கொண்டவரை அழைத்து அமைதியாக “இது மஸ்ஜித்; இதில் நாம் அல்லாஹ்வைத் தொழுவோம்; திக்ர் செய்வோம்; இப்படியெல்லாம் நடந்து கொள்ளக் கூடாது” என்று அறிவுரை கூறினார்கள்.
நபித்தோழர்களிடம் கடுமையாக நடந்து கொள்ளக் கூடாது, மென்மையாக நடந்து கொள்ள வேண்டும் என அறிவுரை கூறுகின்றார்கள். அவர் சிறுநீர் கழிக்க ஆரம்பிக்கும் முன்னர் இதைக் கண்டிருந்தால் உடனே தடுத்திருக்கலாம். கழிக்க ஆரம்பித்த பின்னர் இடையில் விரட்ட முடியாது! அப்படி விரட்டினால் அது அவரையும் பாதிக்கும்; சிறுநீர் முழு மஸ்ஜிதிலும் பட்டு மஸ்ஜிதையும் பாதிக்கும். எனவே, தவறு நடந்துவிட்டால் அதற்கான பரிகாரம் காண்பதுதான் முக்கியம். தவறைச் செய்தவர் அறிவீனத்தின் காரணமாக அதைச் செய்திருந்தால் அது தவறு என மென்மையாக அவருக்குக் கற்றுக் கொடுப்பதுதான் சுன்னாவாகும். தஃவாக் களத்தில் இந்த சுன்னாவெல்லாம் முதுகுக்குப் பின்னால் வீசியெறியப்பட்டுள்ளமை வேதனை தரும் அம்சமாகும்.
ஆரம்ப காலத்தில் தொழுகையில் ஒருவர் மற்றவருக்கு ஸலாம் கூறிக் கொள்வர். பின்னர் தொழுகையில் இது போன்ற நடவடிக்கைகள் தடுக்கப்பட்டன. இதனை முஆவியத்திப்னுல் ஹகம் என்ற நபித்தோழர் அறியாதிருந்தார். இவர் தனக்கு நடந்த ஒரு அனுபவத்தை இப்படிக் கூறுகின்றார்.
“ஒரு நாள் நான் நபி(ச) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தேன். அப்போது ஒருவர் தும்மினார். நான் “யர்ஹமுகல்லாஹ்” என்று கூறினேன். மக்கள் என்னைக் கோபத்துடன் பார்த்தனர். என்ன எல்லோரும் என்னைப் பார்க்கின்றீர்கள் என்று நான் கேட்டேன். அவர்கள் தமது தொடையில் அடித்து என்னை அமைதியாக இருக்கச் சொன்னார்கள். நானும் அமைதியாக இருந்தேன். தொழுகை முடிந்தது. நபியவர்களை விட அழகிய முறையில் கற்றுத் தரும் ஒரு ஆசிரியரை அவருக்கு முன்னரோ, பின்னரோ நான் கண்டதில்லை. அல்லாஹ்வின் மீது சத்தியமாக அவர் எனக்கு அடிக்கவில்லை; ஏசவில்லை; என்னை வெறுக்கவில்லை. தொழுகையில் மனிதர்களுடன் தொடர்புபட்ட எந்தப் பேச்சும் பேசக் கூடாது! இதில் தக்பீர் சொல்லுதல், தஸ்பீஹ் சொல்லுதல், குர்ஆனை ஓதுதல் போன்றவையே இடம்பெற வேண்டும் எனக் கூறினார்கள்.”
(முஸ்லிம்: 33, 537, நஸாஈ: 1218)
நபி(ச) அவர்களுக்கு இந்த மனிதன் இனி இந்தத் தவறைச் செய்யக் கூடாது என்பதுதான் நோக்கம். இதைக் கண்டித்தும் செய்யலாம்; கனிவாகக் கற்றுக் கொடுத்தும் செய்யலாம். ஆனால், ஒரு தனிப்பட்ட நபரிடம் காணப்பட்ட ஒரு நடைமுறைப் பிரச்சினைக்காகத் தனியான ஒரு ஜும்ஆக் குத்பாவையே பயன்படுத்திக் கண்டித்து சாதனை படைக்க விரும்புகின்றனர் சில தாஈக்கள்.
நபி(ச) அவர்கள் சில வேளைகளில் தவறுகளைக் கண்டிக்கும் போது தனி நபர்களைப் பாதிக்காத வழிமுறைகளில் வார்த்தைகளைப் பயன்படுத்துவார்கள். இப்படி இப்படியெல்லம் செய்யும் கூட்டத்தினருக்கு என்ன நடந்துவிட்டது எனப் பொதுப்படையாகக் கேட்பார்கள்.
“தொழுகையில் தமது பார்வையை மேல் நோக்கி உயர்த்தும் கூட்டத்தினருக்கு என்ன நேர்ந்துவிட்டது? அவர்கள் இதை விட்டு விடட்டும் அல்லது அவர்களது பார்வை பறிக்கப்பட்டு விடட்டும் என்று கூறினார்கள்.” (புஹாரி:750)
நபரைக் குறிப்பிடாமல் இப்படிச் செய்பவர்கள், அப்படிச் செய்பவர்கள் என்று கண்டித்துள்ளார்கள்.
எது எப்படி இருப்பினும் ஒரு தாஈ தனது தஃவாப் பணிக்குத் தனது நடவடிக்கை பாதிப்பாக அமைந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். இதுவும் தஃவாவில் நபி(ச) அவர்கள் கடைப்பிடித்த சுன்னாதான் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
“நபி(ச) அவர்கள் ஒரு பங்கீட்டு நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அப்போது ஒரு முனாபிக் “முஹம்மதே! நீதமாய்ப் பங்கு வைப்பீராக!” என்று கூறுகின்றார். நபி(ச) அவர்கள் “நான் நீதமாக நடந்து கொள்ளவில்லை என்றால் வேறு யார்தான் நீதமாக நடந்து கொள்வார்கள்!” என்று கேட்டார்கள். உடனே உமர்(வ) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! அனுமதி தாருங்கள், இந்த முனாபிக்கைக் கொன்று விடுகின்றேன்” என்று கேட்டார்கள். அதற்கு நபி(ச) அவர்கள் “நான் எனது தோழர்களைக் கொலை செய்கின்றேன் என மக்கள் கதைப்பதை விட்டும் அல்லாஹ்தான் பாதுகாக்க வேண்டும் என்று கூறினார்கள்.” (அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு அப்துல்லாஹ், ஆதாரம்: முஸ்லிம ;- 142, 1063, 2496)
அவன் கொல்லப்பட வேண்டியவன் தான். அவனைக் கொன்றால் நபி(ச) அவர்கள் தனது தோழர்களையே கொன்றுவிடுவதாக தகவல் பரவி விடும். இதனால் இஸ்லாத்தை மக்கள் ஏற்றுக் கொள்ளும் வீதம் குறைந்து விடும். தஃவாவுக்குப் பாதிப்பு ஏற்படும். இஸ்லாத்தை ஏற்றால் காபிர்களும் எம்மைக் கொல்வார்கள் அதனால் எமக்குப் பாதுகாப்பு இல்லை என்று மக்கள் எண்ண ஆரம்பித்து விட்டால் இஸ்லாத்தின் வளர்ச்சியே பாதிக்கப் பட்டு விடும் என்பதால் நபி(ச) அவர்கள் இத்தகையவர்களைக் கொலை செய்வதைத் தவிர்த்தார்கள்.
எமது பிரச்சார நடவடிக்கையால், அவதூறுகளால், பொய்க் குற்றச்சாட்டுக்களால், மொட்டைக் கடிதம், அனோமோதய துண்டுப் பிரசுரங்களால் அவர்களுக்குள்ளேயே அடித்துக் கொண்டு சாகின்றார்கள் என்ற எண்ணம் ஏற்பட்டு சத்தியத்தை மக்கள் ஏற்கத் தயங்கினால் மக்கள் மத்தியில் சத்தியம் பரவாமல் தடுக்கும் சாத்தானிய வேலைக்குத் துணை போனவர்களாக நாம் ஆகிவிடுவோம் என்ற அச்சம் ஏன் தாஈக்களிடமிருந்து எடுபட்டுப் போனது?…..