05. அடிமைப் பெண்களை அனுபவிக்க
இஸ்லாம் ஏன் அனுமதியளித்தது!
பலதார மணம் புரிந்து நீதமாக நடக்க முடியாது என நீங்கள் அஞ்சினால் ஒரு மனைவியுடன் அல்லது உங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்ட உங்கள் அடிமைப் பெண்களுடன் போதுமாக்கிக் கொள்ளுங்கள் என 4:3 ஆம் வசனம் கூறுகின்றது.
அடிமைப் பெண்களை மிருகங்களாக நடத்தும் வழிமுறையும் அவர்களைப் பாலியல் தேவைக்காக பயன்படுத்தும் நடைமுறையும் காலா காலமாக இருந்து வந்தது. 19 ஆம் நூற்றாண்டு வரை அடிமைகள் இவ்வாறுதான் நடத்தப்பட்டு வந்தனர்.
இஸ்லாம் இந்த அடிமைகள் விடயத்தில் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்ததுடன் அடிமையின் எஜமான் மட்டும் அவர்களைப் பாலியல் ரீதியில் பயன்படுத்தலாம் என அனுமதித்தது. இது குறித்து சற்று விரிவாக விளங்கிக் கொள்வது அவசியமாகும்.
அன்றைய காலத்தில் போரில் கைது செய்யப்படுபவர்கள் மற்றும் கொள்ளைக்காரர்களால் பிடிக்கப்படுபவர்கள் அடிமைகளாக விற்கப்பட்டனர். இஸ்லாம் இந்த அடிமைகளின் மறுவாழ்வுக்காக பல திட்டங்களை முன்வைத்தது.
குற்றப் பரிகாரம்:
பல குற்றங்களுக்கு அடிமைகளை விடுதலை செய்வதை இஸ்லாம் பரிகாரமாக்கியது.
தவறுதலாக நடக்கும் கொலைக்குப் பகரமாகவும் (4:92), சத்தியத்தை முறித்ததற்காகவும் (5:83), ழிஹார் செய்ததற்காகவும் (58:3), நோன்பு நோற்றிருந்த நேரத்தில் தாம்பத்தியத்தில் ஈடுபட்டதற்காகவும் அடிமைப் பெண்களை விடுதலை செய்ய இஸ்லாம் கூறியது.
நற்காரியம்:
அடிமையை விடுதலை செய்வதை இஸ்லாம் நற்காரியமாகப் போதித்தது.
‘அவ்வாறிருந்தும் அவன் (நன்மைக் குரிய வழிகளாகிய) ‘அகபா’வைக் கடக்கவில்லை.’
‘அகபா’ என்றால் என்னவென (நபியே!) உமக்கு அறிவித்தது எது?’
‘(அது) ஓர் அடிமையை விடுதலை செய்வதாகும்.’
‘அல்லது நெருங்கிய உறவுடைய அநாதைக்கு, அல்லது வறுமையில் வாடும் ஏழைக்கு பசியுடைய நாளில் உணவளிப் பதாகும். ‘ (90:11-16)
இவ்வாறே அடிமை விடுதலைக்கு ஸகாத்தில் கூட பங்கு ஒதுக்கப்பட்டது.
அத்துடன் அடிமைகளுடன் மென்மையாக நடக்க வேண்டும் என்றும் அவர்கள் மீது சக்திக்கு மீறிய வேலைகள் சுமத்தப்படக் கூடாது. அவர்களுக்கு முறையான உணவு, ஓய்வு வழங்கப்பட வேண்டும் என்றெல்லாம் போதித்தார்கள்.
இவ்வாறே பெண் அடிமைகளை விபச்சாரத்திற்குப் பயன்படுத்தி சிலர் உழைத்து வந்தனர். இஸ்லாம் இதைத் தடை செய்தது.
‘கற்பைப் பேண விரும்பும் உங்கள் அடிமைப் பெண்களை, இவ்வுலகின் அற்பப் பொருளைப் பெறுவதற்காக விபச்சாரத்திற்கு நிர்ப்பந்திக்காதீர்கள். அவர்களை எவரேனும் நிர்ப்பந்தித்தால், அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்ட பின்னர் நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன்நிகரற்ற அன்புடையவன்’
(24:33)
அவ்வாறே அவளை அனைவரும் பாலியல் தேவைக்குப் பயன்படுத்தி வந்தனர். இதை இஸ்லாம் தடை செய்து அடிமையின் எஜமான் மட்டும் பாலியல் ரீதியில் தொடர்பு கொள்ளவும் இஸ்லாம் அனுமதியளித்தது. அவள் குழந்தை பெற்றால் அடிமை என்ற நிலையில் இருந்து ‘உம்முல் வலத்’ – பிள்ளையின் தாய் என்ற அந்தஸ்தை அவர் அடைவாள் என இஸ்லாம் கூறி அடிமைப் பெண்களின் விடிவுக்கு வழி வகுத்தது.
இது அடிமைகளின் உணர்வையும் மனிதனின் இயல்பையும் கவனத்திற் கொண்டு இயற்கை மார்க்கமாம் இஸ்லாம் சொன்ன சட்டமாகும்.
பாலியல் தேவை அனைவருக்கும் உள்ளது. இந்த வகையில் அடிமைகளுக்கு திருமணம் செய்து வைப்பதை இஸ்லாம் ஆர்வப்படுத்தியது.
‘ உங்களில் வாழ்க்கைத் துணையில்லாதவர்களுக்கும், உங்களின் ஆண் அடிமைகளிலும் உங்களின் பெண் அடிமைகளிலுமுள்ள நல்லவர்களுக்கும் நீங்கள் திருமணம் செய்து வையுங்கள். அவர்கள் தேவையுடையோராக இருந்தால், அல்லாஹ் தனது அருளால் அவர்களைத் தேவையற்றோ ராக்குவான். அல்லாஹ் விசாலமானவன்| நன்கறிந்தவன்.’ (24:32)
அடிமை ஆண்கள், மற்றும் பெண்களுக்கு திருமணம் செய்து வைக்குமாறு இஸ்லாம் கட்டளையிடுகின்றது.
இவ்வாறே அடிமைப் பெண்களை வைப்பாட்டிகளாக அல்லாமல் அவர்களுக்குரிய மணக் கொடையைக் கொடுத்து அவர்களின் உரிமையாளரின் அனுமதி பெற்று மணமுடிக்கவும் இஸ்லாம் தூண்டுகின்றது.
‘நம்பிக்கை கொண்ட, சுதந்திரமான பெண்களை மஹர் கொடுத்து, திருமணம் செய்ய உங்களில் யார் சக்திபெறவில்லையோ அவர் உங்கள் அடிமைப் பெண்களில் நம்பிக்கையாளர்களைத் (திருமணம் செய்து கொள்ளட்டும்.) அல்லாஹ்வே உங்கள் நம்பிக்கையை நன்கறிந்தவன். உங்களில் சிலர் சிலரைச் சார்ந்தவர்களே! எனவே, அவர்களது எஜமானர்களின் அனுமதியுடன் அவர்களைத் திருமணம் செய்து கொள்ளுங்கள். அவர்களுக்குரிய மணக் கொடைகளை நல்ல முறையில் அவர்களிடம் கொடுத்து விடுங்கள். ‘ (4:25)
தாழ்த்தப்பட்ட பெண்களையே மணமுடிக்கக் கூடாது என்ற மனநிலை இன்று கூட இருக்கும் போது அடிமைப் பெண்களுக்கு வாழ்வு கொடுக்க அன்றே இஸ்லாம் போதித்ததை இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் கண்டு கொள்வதில்லை.
அடுத்து, ஒரு எஜமான் தனது அடிமைப் பெண்ணுக்கு மணமுடித்துக் கொடுக்காவிட்டால் அந்தப் பெண்ணுக்கும் பாலியல் தேவை உள்ளது அவள் தவறு செய்யும் சந்தர்ப்பம் உள்ளது! இதே வேளை, அடிமைப் பெண்களை அனுபவிப்பதைத் தடுத்தாலும் அதை முழுமையாக நடைமுறைப்படுத்துவது சாத்திமில்லை.
இன்று கற்ற பல பெண்கள் கூட பணி இடங்களில் பாலியல் நெருக்கடிகளை சந்திக்கும் போது அடிமை என்ற நிலையில் தனது எஜமானையே முழுமையாக நம்பி வாழும் ஒரு பெண்ணிடம் எஜமான் பாலியல் நோக்கில் நெருங்குவதை தவிர்ப்பதென்பது சாத்தியமல்ல. ஆண்கள் விடயத்தில் பெண்களும், பெண்கள் விடயத்தில் ஆண்களும் பலவீனமாகப் படைக்கப்பட்டுள்ளனர். இந்த இயல்பின் காரணமாக எஜமான் மட்டும் அடிமைப் பெண்ணுடன் பாலியல் தொடர்பு வைப்பதை இஸ்லாம் அனுமதித்தது. ஏற்கனவே இருந்த இந்த நடைமுறையில் குழந்தை பெறுவதன் மூலம் அவள் தனது அடிமைத்துவத்தி லிருந்து விடுபடவும் இஸ்லாம் வழி செய்தது.
இந்த நடைமுறை கூட இஸ்லாம் அறிமுகப் படுத்தியது அல்ல. முன்னைய காலத்திலேயே இருந்ததுதான். இப்றாஹீம் நபியின் மகன் இஸ்மாயீல் (இஸ்மவேல்) இவ்வாறு அடிமைப் பெண்ணுக்குப் பிறந்தவர்தான். இவ்வாறே அடிமைப் பெண்களை அனுபவிக்கலாம் என உபாகமம் 21:10-14 வசனங்களும் கூறுகின்றன.
ரெகோபெயாம் என்பவருக்கு 18 மனைவி 60 மறுமனையாட்டி (அடிமைகள்) இருந்ததாக பைபிள் கூறுகின்றது. (ஐஐ நாளாகமம் 11:21)
இவ்வாறே சுலைமான் நபிக்கு 700 அடிமைகள் – மறுமனையாட்டிகள் இருந்ததாகவும் பைபிள் கூறுகின்றது. எனவே, இது இஸ்லாம் அறிமுகப் படுத்தியதல்ல. ஏற்கவே இருந்த நடைமுறையில் இஸ்லாம் சில சீர்திருத்தங்களைச் செய்து ஒழுங்கு படுத்தியது. உலகளவில் அடிமை முறை ஒழிப்பில் இஸ்லாம் பெரும் பங்காற்றியுள்ளது என்பதை நடு நிலையுடன் நோக்குபவர்கள் உணர்ந்து கொள்ளலாம்.
06. மஹர்:
وَاٰ تُوا النِّسَآءَ صَدُقٰتِهِنَّ نِحْلَةً فَاِنْ طِبْنَ لَـكُمْ عَنْ شَىْءٍ مِّنْهُ نَفْسًا فَكُلُوْهُ هَنِيْٓــٴًـــا مَّرِیْٓـــٴًﺎ
‘பெண்களுக்கு (மஹர் எனும்) அவர்களின் மணக்கொடைகளை மனமுவந்து கொடுத்து விடுங்கள். அவர்கள் தாமாகவே அதில் எதையேனும் உங்களுக்கு மனமுவந்து விட்டுக் கொடுத்தால் அதைத் தாராளமாக மகிழ்வுடன் உண்ணுங்கள்.’ (4:4)
பெண்ணுக்கான மணக் கொடை மஹர் என்று கூறப்படும். இஸ்லாமியத் திருமணத்தில் இது முக்கியமானதாகும். இன்று முஸ்லிம்களில் பலரும் பெண் வீட்டாரிடம் சீதனம் பெறுகின்றனர். இது பெரும் குற்றமாகும். இஸ்லாம் பெண்ணுக்கு ‘மஹர்’ – மணக் கொடை கொடுத்து மணமுடிக்க வேண்டும் என்று கட்டளையிடுகின்றது.
இந்த மஹர் பணமாகவும், பொருளாகவும் இருக்கலாம். சில நபித்தோழர்கள் தோட்டத்தை, தங்கத்தைக் கொடுத்து திருமணம் முடித்துள்ளனர். மணப்பெண் எதை ஏற்றுக் கொள்கின்றாளோ அதுவும் மஹராக அமையலாம்.
அபூதல்ஹா(ர) உம்மு சுலைம்(ர); அவர்களைத் திருமணம் செய்ய விரும்பிய போது நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் அதையே மஹராக ஏற்றுக் கொள்கின்றேன் என்று கூறியுள்ளார்.
இவ்வாறே குர்ஆனின் சூறாக்களைக் கற்றுக் கொடுத்து அதையே மஹராக நபி(ச) அவர்கள் ஆக்கியுள்ளார்கள். மஹர் என்பது பெண் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக அமைய வேண்டும்.
ஒருவர் மணமுடித்து அந்தப் பெண்ணுடன் வாழ்ந்துவிட்டு பிரிய நினைத்தால் எவ்வளவுதான் மணக்கொடை கொடுத்திருந்தாலும் அதை மீளப் பெற முடியாது.
‘ஒரு மனைவியின் இடத்தில் வேறொரு மனைவியை (விவாகரத்தின் மூலம்) மாற்றிக்கொள்ள நீங்கள் நாடினால் அவர்களில் ஒருத்திக்கு ஒரு செல்வக் குவியலையே (மஹராக) கொடுத்திருந்தாலும் அதிலிருந்து எதையும் எடுத்துக் கொள்ளாதீர்கள். அநியாயமாகவும் பகிரங்கமான குற்றமாகவும் அதை நீங்கள் பறித்துக் கொள்வீர்களா?’
அவர்கள் உங்களிடம் உறுதியான உடன்படிக்கையை எடுத்து, நீங்கள் ஒருவரோடு ஒருவர் கலந்து இன்பம் அனுபவித்திருக்கும் நிலையில் அதை எப்படி நீங்கள் எடுக்க முடியும்?’
(4:20,21)
ஒரு பெண் தனது கணவரை வேண்டாம் என்று கூறினால் அவர் கொடுத்த மணக் கொடையை மீளக் கையளிக்க வேண்டும்.
திருமணம் செய்து இல்லறத்தில் ஈடுபட முன்னர் ‘தலாக்’ – விவாகரத்து நடந்தால் குறித்த மஹரில் அரைவாசியை அப்பெண்ணுக்கு வழங்க வேண்டும். இதில் பெண் தரப்பு தனது பகுதியை விட்டுக் கொடுப்பதோ அல்லது மாப்பிள்ளை தனது மீதி 50% ஐ விட்டுக் கொடுத்து பேசிய படி முழு மஹரைக் கொடுப்பதோ அவரவர் நல்ல சுபாவத்தைப் பொருத்ததாகும்.
‘நீங்கள் அவர்களுக்கு மஹரை நிர்ணயம் செய்து, அவர்களைத் தீண்டு வதற்கு முன் விவாகரத்துச் செய்து விட்டால் அப்பெண்களோ அல்லது திருமண ஒப்பந்தம் யார் கையில் இருக்கிறதோ அ(க்கண)வரோ விட்டுக் கொடுத்தாலே தவிர நீங்கள் நிர்ணயம் செய்த மஹரில் அரைவாசியை அப்பெண்களுக்குக் கொடுப்பது கடமையாகும். எனினும், நீங்கள் அதை விட்டுக் கொடுப்பதே பயபக்திக்கு மிக நெருக்கமாகும். மேலும், உங்களுக்கிடையில் தயாளத்தன்மையுடன் நடந்து கொள்வதை மறந்து விட வேண்டாம். நீங்கள் செய்பவற்றை நிச்சயமாக அல்லாஹ் பார்ப்பவனாவான்.’
(2:237)
இஸ்லாம் விதித்த இந்த மஹர் தொடர்பான சட்டம் பெண்ணினத்திற்கு இஸ்லாம் கொடுத்த உரிமைகளில் ஒன்றாகும். இதை மீறுவறு குற்றமாகும். இதை மீறி பெண்ணிடம் வரதட்சணை வாங்குவது ஆண் இனத்திற்கே அவமானமாகும்!
எனக்கு உண்மை உதயம் மாத இதழ் தமிழ் நாட்டில் கிடைக்கும் முகவரியை தெரியப்படுத்தங்கள்