அல்குர்ஆன் விளக்கவுரை:
“அல்லாஹ்வின் வர்ணத்தைப் (பின்பற்றுங்கள்.) அல்லாஹ்வை விட வர்ணம் தீட்டுவதில் மிக அழகானவன் யார்? நாம் அவனையே வணங்குவோராக இருக்கின்றோம் (எனக் கூறுவீர்களாக!)” (2:138)
அன்றைய கிறிஸ்தவர்களுக்குக் குழந்தை பிறந்தால் 7-ஆம் நாளில் அக்குழந்தையை மஞ்சள் கலந்த நீரில் குளிப்பாட்டுவார்கள். அதனை கத்னாவுக்குப் பகரமான செயற்பாடாகவும் அவர்கள் எடுத்துக் கொள்வார்கள். இவ்வாறு குளிப்பாட்டுவதன் மூலம் அந்தக் குழந்தை கிறிஸ்தவனாக மாறுவதாகவும் அவர்கள் கருதினர். இவ்வாறு ஒருவனை இஸ்லாத்துக்கு எடுப்பதற்கு எவ்விதமான சடங்குகளும் இல்லாது இருப்பதைக் குறையாகக் கண்டனர். இதற்குப் பதிலாகவே இந்த வசனம் அருளப்பட்டது என இப்னு அப்பாஸ்(வ) அவர்கள் கூறுகின்றார்கள்.
கத்னாவுக்குப் பகரமாக வர்ணம் கலந்த நீரில் குளிப்பாட்டுவது எப்படியும் சமமாகப் போவதில்லை. யூதர்களும் கிறிஸ்தவர்களும் தாம் இப்றாஹீம் நபியின் வழியைப் பின்பற்றுவதாக தம்பட்டம் அடித்துக் கொண்டனர். ஆனால், இப்றாஹீம் நபிக்கு மாற்றமாக சிலை வணக்கத்தையும் செய்து வந்தனர்.
இப்றாஹீம் நபி கத்னா விடயத்தில் பேணுதலாக நடந்தவர். இஸ்லாத்தை விட பைபிளே கத்னாவை மிகவும் வலியுறுத்திப் பேசியுள்ளது. கத்னா என்பது கடவுளின் உடன்படிக்கை என்று பழைய ஏற்பாடு கூற, கிறிஸ்தவ சமூகம் அதைக் கைவிட்டுவிட்டு சாதாரணக் குளியலை அதற்கு நிகராக ஆக்கிக் கொண்டுள்ளது. பைபிளின் பின்வரும் வசனங்கள் கத்னாவின் முக்கியத்துவத்தையும் இப்றாஹீம் நபி அதில் காட்டிய அக்கறையும் தெளிவுபடுத்துகின்றன.
எனக்கும் உங்களுக்கும், உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நடுவே உண்டாகிறதும், நீங்கள் கைக்கொள்ள வேண்டியதுமான என் உடன்படிக்கை என்னவென்றால், உங்களுக்குள் பிறக்கும் சகல ஆண் பிள்ளைகளும் விருத்தசேதனம் பண்ணப்பட வேண்டும். (ஆதி 17:10)
உங்கள் நுனித்தோலின் மாம்சத்தை விருத்தசேதனம் பண்ணக்கடவீர்கள். அது எனக்கும் உங்களுக்குமுள்ள உடன்படிக் கைக்கு அடையாளமாயிருக்கும். (ஆதி 17:11)
எல்லா ஆண் குழந்தைகளுக்கும் கத்னா செய்ய வேண்டும் என்பது தேவனின் உடன்படிக்கை என இந்த தேவகாம வசனங்கள் சொல்கின்றன. அவர்கள் கடவுளின் உடன்படிக்கையை மீறினர்.
அப்பொழுது ஆபிரகாம் தன் குமாரனாகிய இஸ்மவேலையும், தன் வீட்டிலே பிறந்த யாவரையும், தான் பணத்திற்குக் கொண்ட அனைவருமாகிய தன் வீட்டிலுள்ள ஆண் பிள்ளைகள் எல்லாரையும் சேர்த்து, தேவன் தனக்குச் சொன்னபடி, அவர்கள் நுனித்தோலின் மாம்சத்தை அந்நாளிலேதானே விருத்தசேதனம் பண்ணினான். (ஆதி 17:23)
தன் குமாரனாகிய ஈசாவுக்குப் பிறந்த எட்டாம் நாளிலே, ஆபிரகாம் தனக்குத் தேவன் கட்டளையிட்டிருந்தபடி அவனுக்கு விருத்த சேதனம் பண்ணினான். (ஆதி 21:4)
அடுத்து, மத மாற்றத்திற்காக வெறும் ஞானஸ் ஞானம் செய்வதை விட அல்லாஹ் தீட்டும் வர்ணம் அழகானது என்று இந்த வசனம் கூறுகின்றது. அல்லாஹ்வின் வர்ணம் என இந்த இஸ்லாம் எனும் மார்க்கம் இங்கு வர்ணிக்கப்படுகின்றது.
வர்ணம் தீட்டினால் ஒரு பொருளின் வெளிப்பகுதி மட்டுமே மாறுகின்றது. அல்லாஹ் தீட்டும் வர்ணம் எனும் இந்த இஸ்லாம் மூலம் ஒரு மனிதனின் கொள்கை, நம்பிக்கைகள், நடத்தைகள், செயற்பாடுகள், பழக்கவழக்கங்கள் அனைத்துமே மாற்றப்படுகின்றன.
சாதாரண வர்ணம் தீட்டுவதை விட இஸ்லாம் எனும் வர்ணம் தீட்டுதல் ஆழமானது; நிரந்தரமானது; நிஜமானது; நீடித்து நிலைக்கக் கூடியது. இந்த வகையிலே அல்லாஹ்வை விட மிக அழகிய வர்ணம் தீட்டுபவன் யார்? என இங்கு கேள்வி எழுப்பப்படுகின்றது.