அல்லாஹ்வின் வருகையை இவர்கள் எதிர்பார்க்கின்றனரா? என்ற தொனியில் இந்த வசனம் அமைந்துள்ளது. அல்லாஹ்வுக்கு வருதல் (அல்மகீஉ) என்ற ஒரு பண்பு உள்ளது என்பதற்கு இது போன்ற வசனங்கள் சான்றாக உள்ளன.
‘அவ்வாறன்று, பூமி துகள் துகளாக தகர்க்கப்படும் போது,’
‘வானவர்கள் அணி அணியாக நிற்க, உமது இரட்சகன் வருவான்.’
‘அந்நாளில் நரகம் கொண்டு வரப்படும். அந்நாளில்தான் மனிதன் உணர்வு பெறுவான். அவ்வுணர்வு அவனுக்கு எப்படிப் பயனளிக்கும்?'(89:21-23)
இந்த வசனம் அல்லாஹ்வின் வருகை பற்றிப் பேசுகின்றது. இது போன்று அல்லாஹ்வின் பண்புகள், செயல்கள் பற்றிப் பேசும் வசனங்களை அப்படியே நாம் நம்ப வேண்டும். ‘அல்லாஹ் வருவான்’ என்றால் ‘அவனது கட்டளை வரும்’ அல்லது ‘அவனது தண்டனை வரும்’ என்று நாம் மாற்று விளக்கம் கூறக் கூடாது. அவன் எப்படி வருவான் என்று கேள்வி கேட்கக் கூடாது. இப்படித்தான் வருவான் என வர்ணிக்கக் கூடாது. அல்லாஹ்வின் கண்ணியத்திற்கும் வல்லமைக்கும் ஏற்ப அவன் நாடும் போது நாடும் விதத்தில் வருவான் என்று நம்ப வேண்டும். அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்தினரது உலமாக்கள் இப்படித்தான் நம்பியுள்ளனர்.
மாற்று விளக்கம் (தஃவீல்) கொடுக்கும் போது அல்லது உள்ள அர்த்தத்தைத் திரிக்கும் போது எம்மை அறியாமலேயே வழிகேடுகள் வந்து நுழைந்துவிடலாம்.
நாம் இப்போது விளக்கத்திற்கு எடுத்துள்ள வசனத்தில் வரும் அல்லாஹ்வின் வருகை என்பதைக் கடந்த காலத்தில் வாழ்ந்த சில அறிஞர்கள் அல்லாஹ்வின் தண்டனை வருவதை இவர்கள் எதிர்பார்க்கின்றார்களா என்பதே இதன் அர்த்தமாகும் என விளக்கமளித்துள்ளனர். இருப்பினும் இது தவறாகும்.
‘அல்லாஹ்வும் வானவர்களும் மேகத்தின் நிழல்களில் அவர்களிடம் வந்து (அவர்களின்) காரியம் முடிக்கப்படுவதையா அவர்கள் எதிர்பார்க்கின்றனர்? அல்லாஹ் விடமே காரியங்கள் அனைத்தும் மீட்டப் படும்.'(2:210)
மேகக் கூட்டங்கள் வழியாக அல்லாஹ் வருவான் என்றால் அல்லாஹ்வின் தண்டனை மேகக் கூட்டங்களின் வழியாக வரும் என்பதுதான் பொருள் என்று மாற்றுக் கருத்துக் கூறிவிடலாம். ஆனால், கீழே உள்ள வசனத்தை ஒரு முறை உற்று நோக்கினால் இந்த விளக்கம் தவறானது என்பதைப் புரியலாம்.
‘அவர்கள் தம்மிடம் வானவர்கள் வருவதையா, அல்லது உமது இரட்சகன் வருவதையா, அல்லது உமது இரட்சகனின் சில அத்தாட்சிகள் வருவதையா, எதிர்பார்க்கின்றனர்? உமது இரட்சகனின் அத்தாட்சிகளில் சில வரும் நாளில் அதற்கு முன்னர் நம்பிக்கை கொள்ளாது, அல்லது தனது நம்பிக்கையில் நல்லதைத் தேடிக் கொள்ளாதிருந்த எந்த ஆத்மாவுக்கும் அதன் நம்பிக்கை பயனளிக்காது. (அதை) நீங்களும் எதிர்பாருங்கள்! நாங்களும் நிச்சயமாக எதிர்பார்க்கின்றோம் என (நபியே!) நீர் கூறுவீராக!'(6:158)
இந்த வசனத்தில் ‘மலக்குகளின் வருகை’, ‘அல்லாஹ்வின் வருகை’, ‘அல்லாஹ்வின் சில அத்தாட்சிகளின் வருகை’ என்று மூன்று வருகை பற்றிப் பேசப்படுகின்றது. அல்லாஹ்வின் வருகை என்பதற்கு அல்லாஹ்வின் கட்டளை அல்லது வேதனையின் வருகை என அர்த்தம் செய்தால் அல்லாஹ்வின் அத்தாட்சிகளின் வருகை என்பதற்கு என்ன அர்த்தம் செய்வது? இங்கே ‘அல்லது’ என்று கூறப்படுவதன் மூலம் மூன்று வருகையும் வேறு வேறானது என்பது தெளிவாகின்றது.
இதன்பின் அல்லாஹ்வின் வருகை என்பதும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளின் வருகை என்பதும் ஒன்றுதான் எனக் கூறி மூன்றை இரண்டாக மாற்றுவது வரம்பு மீறலாகவே இருக்கும். எனவே, அல்லாஹ் வருவான் என்பதை அல்லாஹ் வருவான் என்று எடுத்துக் கொள்வதே ஏற்றமானதாகும்.
அடுத்து, 2:110 வசனத்தை உன்னிப்பாகக் கவனித்தால் மறுமை பற்றி இந்த வசனம் பேசுகின்றது என்பதைப் புரிந்து கொள்ளலாம். மறுமையில் அல்லாஹ் வந்து விசாரித்து தீர்ப்பு வழங்குவது பற்றியே இந்த வசனம் பேசுகின்றது. இமாம் இப்னு கதீர் (ரஹ்) அவர்கள் இது தொடர்பாக விரிவாகப் பேசுகின்றார்கள். எனவே, இது உண்மையில் அல்லாஹ் வருவது பற்றித்தான் பேசுகின்றது என்பது இதன் மூலமும் இன்னும் உறுதி செய்யப்படுகின்றது.
எதை எவருக்கு எப்படிச் செலவிடுவது:
‘(நபியே!) அவர்கள் உம்மிடம் எதை (யாருக்கு) செலவு செய்வது? என்று கேட்கின்றனர். நன்மை தரும் எதனை நீங்கள் செலவளித்தாலும் (அது) பெற்றோர்கள், நெருங்கிய உறவினர்கள், அநாதைகள், ஏழைகள், வழிப்போக்கர்கள் ஆகியோருக்குரியதாகும் என்று (நபியே!) நீர் கூறு வீராக! மேலும், நீங்கள் செய்கின்ற எந்த வொரு நன்மையானாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவனாவான்.'(2:215)
இஸ்லாம் வாழ்வின் சகல துறைக்கும் வழிகாட்டும் மார்க்கமாகும். தர்மம் செய்வது எப்படி என்பதை இந்த வசனம் தெளிவுபடுத்துகின்றது. சிலர் கொள்ளையடித்து அதை தர்மம் செய்கின்றனர். அடுத்தவன் பணத்தை சூறையாடி ஏழைக்கு வழங்குவ தெல்லாம் ஹீரோயிஸமாகப் பார்க்கப் படுகின்றது. நல்லதை தர்மம் செய்ய வேண்டும் என்று இந்த வசனம் கூறுகின்றது.
இருப்பதையெல்லாம் வாரி வழங்கிவிட்டு அடுத்தவனிடம் கையேந்தும் நிலைக்கு வருவதை சிலர் சிறந்த தர்மமாகப் பார்க்கின்றனர்.
‘(நபியே!) மது, சூதாட்டம் குறித்து அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். ‘அவ்விரண்டிலும் பெரும்கேடும், மனிதர்களுக்கு (சில) பயன்களும் இருக்கின்றன. எனினும், அவ்விரண்டின் பயனை விட அவ்விரண்டின் கேடு மிகப்பெரியதாகும்’ எனக் கூறுவீராக! மேலும், தாம் எதைச் செலவு செய்வது? என்றும் உம்மிடம் கேட்கின்றனர். ‘(தேவைக்குப் போக) மீதமுள்ளதை’ எனக் கூறுவீராக! நீங்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறே அல்லாஹ் வசனங்களை உங்களுக்குத் தெளிவுபடுத்துகின்றான்.'(2:219)
தனது அடிப்படைத் தேவைகள் போக மீதமிருப்பதையே தர்மம் செய்ய வேண்டும் என்றும் போதிக்கப்படுகின்றது.
‘(நீர் செலவு செய்யாது) உமது கையை உமது கழுத்தில் கட்டப்பட்டதாக ஆக்கிக் கொள்ளாதீர். மேலும், (அனைத்தையும் செலவு செய்து) அதனை முழுமையாக விரித்துவிடவும் வேண்டாம். அவ்வாறாயின், நீர் இழிவுபடுத்தப்பட்டவராகவும், கைசேதப்பட்டவராகவும் ஆகிவிடுவீர்.'(17:29)
தர்மம் செய்வதிலும் நடுநிலை பேண வேண்டும் என இந்த வசனம் போதிக்கின்றது.
அடுத்து, பேருக்கும் புகழுக்குமாக ஊருக்கெல்லாம் தர்மம் செய்யும் சிலர் பெற்றோர்களையும், உற்றார் உறவினர் களையும் புறக்கணித்துவிடுகின்றனர். பெற்றார், நெருங்கிய உறவினர்கள், ஏழைகள், வழிப்போக்கர்கள் என தர்மத்தில் முதன்மைப் படுத்தப்பட வேண்டியவர்கள் யார் யார் என்பதையும் இந்த வசனம் தெளிவு படுத்திவிடுகின்றது.
குழப்பம் கொலையை விடக் கொடியது:
‘(நபியே!) புனித மாதத்தில் போர் புரிவது பற்றி உம்மிடம் கேட்கின்றனர். அதில் போர் புரிவது பெரும் குற்றமே. (எனினும்) அல்லாஹ்வின் பாதையை விட்டும், (மக்களைத்) தடுப்பதும் அவனை நிராகரிப்பதும், மஸ்ஜிதுல் ஹராமை விட்டும் தடுப்பதும் அங்குள்ளோரை அங்கிருந்து வெளியேற்றுவதும் அல்லாஹ்விடத்தில் மிகப்பெரும் குற்றமாகும். மேலும், குழப்பம் விளைவிப்பது கொலையை விட பெரும் குற்றமாகும் என்று (நபியே!) நீர் கூறுவீராக! அவர்களுக்கு முடியுமானால் உங்கள் மார்க்கத்தை விட்டும் உங்களைத் திருப்புகின்ற வரை உங்களுடன் அவர்கள் போரிட்டுக் கொண்டேயிருப்பார்கள். உங்களில் எவர் தனது மார்க்கத்தை விட்டும் மாறி காபிராக மரணித்தும் விடுகின்றாரோ, அவர்களது செயல்கள் இம்மையிலும் மறுமையிலும் அழிந்து விடும். அவர்கள் நரகவாசிகளே! அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.'(2:217)
குழப்பம் (பித்னா விளைவிப்பது) கொலையை விடக் கொடியது என்று இந்த வசனம் கூறுகின்றது. இதே கருத்தை 2:191 வசனமும் கூறுகின்றது. மக்கத்துக் காபிர்கள் அல்லாஹ்வுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக பல குற்றச் செயல்களைச் செய்து வந்தனர்.
Ø அல்லாஹ்வின் பாதையை விட்டும் மக்களைத் தடுத்தனர்.
Ø ஏக இறைவனை மறுத்தனர்.
Ø மக்காவில் உள்ள மஸ்ஜிதுல் ஹராம் புனித பள்ளியை விட்டும் மக்களைத் தடுத்தனர்.
Ø அங்கிருந்த மக்களை அங்கிருந்து வெளியேற்றினர்.
Ø இஸ்லாத்தை ஏற்ற மக்களை மதம் மாற்றுவதற்கு தம்மாலான அனைத்து வழிகளிலும் முயற்சித்தனர்.
குழப்பத்தை ஏற்படுத்தும் இவர்களின் இத்தகைய நடைமுறைகள் கொலையை விடக் கொடியது என்றே இந்த வசனம் கூறுகின்றது.
இந்த வசனம் அருளப்படுவதற்கு ஒரு பின்னணிச் சம்பவம் உள்ளது.
நபி(ச) அவர்கள் உளவு வேலைக்காக ஒரு சிறு குழுவை மதீனாவின் எல்லைப்புறத்திற்கு அனுப்பினார்கள். அவர்கள் இஸ்லாத்தின் எதிரிகள் சிலரைக் கண்டனர். அதற்கு அடுத்த நாள் போர் செய்வதற்குத் தடுக்கப்பட்ட ரஜப் மாதத்திற்குரியதாகும். இருப்பினும் தாம் முன்னைய மாதத்தின் இறுதியில் இருப்பதாக அவர்கள் கருதினர். அந்தப் படை, எதிரிகள் மீது தாக்குதல் நடத்தி ஒருவரைக் கொலை செய்து இருவரைக் கைதிகளாகப் பிடித்து வந்தனர். இவர்களின் இந்தச் செயலை நபி(ச) அவர்கள் கடுமையாகக் கண்டித்தார்கள். போர் செய்யக் கூடாத மாதம் என்ற பொது விதியை மீறியமைக்காகவும், ஏவப்படாத வேலையைச் செய்துவிட்டு வந்ததற்காகவும் நபி(ச) அவர்கள் அக்குழுவைப் புறக்கணித்தார்கள். அப்போது முஹம்மது பொது விதியை மீறிவிட்டார் என இஸ்லாத்தின் எதிரிகள் விமர்சனம் செய்தனர். கஃபா பள்ளிக்கு வருவதைத் தடுக்கக் கூடாது என்பதும் பொது விதிதான். அங்குள்ளவர் களுக்கு அநீதி இழைக்கக் கூடாது என்பதும் பொது விதிதான். இதையெல்லாம் அப்பட்டமாக மீறியவர்கள் முஹம்மது பொது விதியை மீறிவிட்டார் என விமர்சனம் செய்வது கேலிக்குரியதாகும். இதைச் சுட்டிக்காட்டும் வண்ணமே இந்த வசனம் அருளப்பட்டதாகும்.
இந்த வசனம் அருளப்பட்ட பின்னர் அந்தக் குழுவினரை நபி(ச) அவர்கள் மன்னித்ததுடன் கொல்லப்பட்டவருக்கான நஷ;டஈட்டையும் வழங்கினார்கள். நபி(ச) அவர்கள் போரின் போது கூட பொது விதிகளை மீறக் கூடாது என்பதில் கவனம் செலுத்தியதுடன், தமது படையினர் தவறு செய்யும் போது அவர்களைக் கண்டித்து வழிநடாத்தியுள்ளமையையும், படையினர் விட்ட தவறுக்காகக் கூட தவறுகளுக்குரிய நஷ;டஈட்டைச் செலுத்தி பரிகாரம் கண்டுள்ளமை யையும் இது தெளிவுபடுத்துகின்றது.
இன்ஷா அல்லாஹ் தொடரும்…