“பத்வா” என்றால் மார்க்கத் தீர்ப்பு என்று பொருள்படும். பத்வா வழங்கும் மார்க்க அறிஞர் “முப்தீ” என அழைக்கப்படுவார். இஸ்லாமியச் சட்டவாக்கத்தில், மார்க்கச் சட்டம் குறித்துக் கேட்கப்படும் கேள்விக்கு அது குறித்த மார்க்கத்தின் சட்டத்தை எடுத்துச் சொல்வதே பத்வா எனப்படுகின்றது.
இஸ்லாம் என்பது ஒரு வாழ்க்கைத் திட்டமாகும். எனவே ஒரு முஸ்லிமின் முழு வாழ்வும் மார்க்க வழிகாட்டலுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். அவனது இபாதத், இல்லற வாழ்வு, பொருளீட்டல் அனைத்தையும் அவன் மார்க்க அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு செயற்படும் போது அலை அலையாகக் கேள்விக் கணைகள் எழுவது இயல்பே! எனவே, மார்க்க அறிஞர்களிடம் அவற்றுக்கான தெளிவைப் பெறுதல் அவசியமாகின்றது. இந்த வகையில் “பத்வா” என்பது மிக முக்கியமான ஒரு அம்சமாகத் திகழ்கின்றது.
“(நபியே!) உம்மிடம் அவர்கள் (“கலாலா” பற்றி) மார்க்கத் தீர்ப்புக் கோருகின்றனர்..” (4:176)“(நபியே!) பெண்கள் விடயத்தில் அவர்கள் உம்மிடம் மார்க்கத் தீர்ப்புக் கோருகின்றனர்..” (4:127)“(நபியே!) பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கின்றனர்..” (2:189)“(நபியே!) புனித மாதத்தில் போர் புரிவது பற்றி உம்மிடம் கேட்கின்றனர்..” (2:217) (மேலும் பார்க்க: 2:215, 217, 219, 5:4, 8:179:42)
மேற்படி வசனங்களில் மக்கள் கேட்கும் கேள்விகளைக் குறிப்பிடும் அல்லாஹ், அவற்றுக்கான பதில்களையும் கூறியிருப்பது மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு மார்க்கத் தீர்ப்பு வழங்குவது முக்கியமான ஒரு பணி என்பதை உணர்த்துகின்றது.
அடுத்து, மக்களுக்கு மார்க்கத் தீர்ப்பு வழங்குவதை அல்லாஹ் நபி(ச) அவர்களின் பணிகளில் ஒன்றாகத் திருமறைக் குர்ஆனில் குறிப்பிடுகின்றான். இதன் மூலம் “பத்வா” என்பது உயர்தரமான பணி என்பதை அறியலாம்.
“பத்வா” என்பது அல்லாஹ்வினதும், அவனது தூதரினதும் கூற்றுக்களில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மார்க்கத் தீர்ப்புக் கூறுகின்ற முக்கிய பணி என்பதால், இந்தப் பணியில் தகுதியற்றவர்கள் ஈடுபடக் கூடாது. ஷரீஆவின் இலட்சியங்களையும், மார்க்கச் சட்ட விதிகளையும் அறியாதவர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டால் அது சமூகத்தில் பாரிய பிரச்சினைகளை உண்டுபண்ணி விடும்.
எனவேதான், மார்க்கத் தீர்ப்புகளை வேண்டி நிற்பவர்கள் அந்தத் தீர்ப்புகளை மார்க்க அறிஞர்களிடம்தான் கேட்க வேண்டும். முற்காலத்தில் 99 கொலைகள் செய்த ஒருவன் தனக்கு மன்னிப்பு உண்டா என ஒரு வணக்கசாலியிடத்தில் கேட்கின்றான். அவர் இல்லையென்கின்றார். அவன் அவரையும் கொலை செய்து விடுகின்றான். பின்னர் ஒரு அறிஞரிடம் கேட்ட போது அவர் மன்னிப்பு உண்டெனக் கூறியதுடன் அவனுக்குத் திருந்தி வாழ்வதற்கான வழியையும் காட்டினாரென ஹதீஸ் கூறுகின்றது.
கேள்வி கேட்பவர்களைப் பார்த்து அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது.
“..நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் (வேத) அறிவுள்ளோரிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.” (16:43)
அதாவது, நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் மார்க்க அறிஞர்களிடம் கேட்டு அறிந்துகொள்ளுங்கள் எனக் கூறுவதன் மூலம் மார்க்க அறிவோ, அடிப்படைகளோ தெரியாதவர்களிடம் பத்வாக் கேட்கக் கூடாது என்பது தெளிவுபடுத்தப்படுகின்றது.
இதே வேளை, ஃபத்வா வழங்குபவர்களைப் பார்த்து.
“நீங்கள் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டுவதற்காக, இது தடை செய்யப்பட்டது; இது ஆகுமானது எனப் பொய்யாக உங்கள் நாவுகள் வர்ணிப்பதையெல்லாம் கூறாதீர்கள். நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டுகிறார்களோ அவர்கள் வெற்றி பெற மாட்டார்கள்.” (16:116)
என்றும், அல்குர்ஆன் எச்சரிப்பதன் மூலம் மார்க்கத்துக்கு முரணாக பத்வா வழங்குபவர்கள் அல்லாஹ்வின் மீது இட்டுக் கட்டுகின்றனர் என்றும் அல்குர்ஆன் கண்டிக்கின்றது.
பத்வாவுக்கான அடிப்படைகள்:
ஒரு பத்வாவில் நான்கு அம்சங்கள் இருக்கும்:
(1) பத்வா வழங்குபவர். (முப்தீ)
(2) பத்வாக் கேட்பவர். (முஸ்தப்தீ)
(3) மார்க்கக் கேள்வி. (சந்தேகம்)
(4) மார்க்கத் தீர்ப்பு. (பத்வா)
1. முப்தி:
இவர் மார்க்கத்தின் சட்டத்தை எடுத்துக் கூறுபவர். இவர் மார்க்க அறிவு உள்ளவராக இருப்பது முக்கிய நிபந்தனையாகும்.
“உமக்கு எது பற்றி அறிவில்லையோ, அதை நீர் பின்பற்ற வேண்டாம். நிச்சயமாக செவிப் புலன், பார்வை, இதயம் ஆகிய இவை ஒவ்வொன்றும் விசாரிக்கப்படக் கூடியதாக இருக்கின்றன.” (17:36)
அறிவற்ற விடயத்தில் தலையிடக் கூடாது என அல்குர்ஆன் கண்டிக்கின்றது. மார்க்க அறிவு அற்றோர் மார்க்கத் தீர்ப்பு வழங்கும் பணியில் ஈடுபடக் கூடாது.
“மானக்கேடானவற்றில் பகிரங்கமானவற்றையும், மறைவானவற்றையும் பாவத்தையும் உரிமையின்றி வரம்பு மீறுவதையும் எவ்வித ஆதாரத்தையும் அல்லாஹ் இறக்காமல் இருக்கும் போது அவனுக்கு இணை வைப் பதையும், அல்லாஹ்வின் மீது நீங்கள் அறியாதவற்றைக் கூறுவதையுமே எனது இரட்சகன் தடை செய்துள்ளான் என (நபியே!) நீர் கூறுவீராக!” (7:33)
இந்த வசனம் அல்லாஹ்வின் விடயத்தில் அறியாதவற்றைப் பேசலாகாது எனத் தடுக்கின்றது. இந்த வகையில் மார்க்க அறிவு உள்ளவர்கள்தான் மார்க்கத் தீர்ப்பு அளிக்க வேண்டும்.
அறிவு எனும் போது குர்ஆன்-ஹதீஸுடைய அறிவுடன் உலூமுல் குர்ஆன், உஸூலுல் ஹதீஸ், இஸ்லாமிய ஷரீஆவின் நோக்கங்கள் என்பவற்றையும் அறிந்திருக்க வேண்டும். இதே வேளை உலக நடைமுறை, மக்கள் நிலவரம் என்பவற்றையும் அறிந்திருக்க வேண்டும். இது குறித்து இமாம் இப்னுல் கையிம்(றஹ்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.
“பத்வா வழங்குபவர் மக்களின் நிலைமைகளைப் பற்றி அறிந்து இருப்பது அவசியமாகும்! இல்லாவிடில், அவரும் தடம் புரண்டு, மற்றவர்களையும் தடம் புரளச் செய்து விடுவார்!”
அடுத்து, பத்வா வழங்குபவர் தனது அறிவுக்கு ஏற்ப அமல் செய்பவராக இருக்க வேண்டும்.
“நீங்கள் வேதத்தைப் படித்துக் கொண்டே, உங்களை மறந்து விட்டுப் (பிற) மனிதர்களுக்கு நன்மையை ஏவுகிறீர்களா? நீங்கள் விளங்கிக்கொள்ள மாட்டீர்களா?” (2:44)
“நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் செய்யாத வற்றை ஏன் கூறுகிறீர்கள்? நீங்கள் செய்யாதவற்றைக் கூறுவது அல்லாஹ்விடம் கோபத்தால் பெரிதாகி விட்டது.” (61:2-3)
2. தீர்ப்புக் கேட்பவர்:
தீர்ப்புக் கேட்பவர் கேட்கும் கேள்விக்குக் குர்ஆன்-ஸுன்னாவின் தீர்வை எதிர்பார்த்தே கேட்க வேண்டும். சிலர் தமக்குள் ஒரு முடிவை வைத்துக் கொண்டு அந்த முடிவுதான் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் கேட்பர். அல்லது அந்த முடிவு கிடைப்பதற்கு ஏற்றாற் போல் கேள்வியையும், அதற்குத் தேவையான சந்தர்ப்ப சூழ்நிலைகளையும் உருவாக்கிக் கொள்வர். இது தவறாகும்.
“(நபியே!) உமக்கு இறக்கப்பட்டதையும், உமக்கு முன்னர் இறக்கப்பட்டவற்றையும் நிச்சயமாக நம்பிக்கை கொண்டதாக எண்ணிக்கொள்வோரை நீர் கவனிக்கவில்லையா? “தாகூத்” (எனும் அல்லாஹ் அல்லாது வணங்கப்படுபவை)களை நிராகரிக்கும் படி இவர்கள் ஏவப்பட்டிருந்தும் அவர்களிடம் தீர்ப்புப் பெற விரும்பிச் செல்கின்றனர். ஆனால், ஷைத்தானோ அவர்களை வெகு தூரமான வழிகேட்டில் செலுத்திடவே விரும்புகின்றான்.” (4:60)
ஸுன்னாவிலிருந்து தீர்ப்புக் கூறப் பட்டால் அதைத் திருப்தியுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
“(நபியே!) உமது இரட்சகன் மீது சத்தியமாக அவர்கள் தமக்கிடையில் ஏற்பட்ட சர்ச்சையில் உம்மை நீதிபதியாக்கி, பின்னர் நீர் வழங்கும் தீர்ப்பை தம் மனங்களில் எத்தகைய அதிருப்தியும் கொள்ளாது ஏற்று, அதற்கு முற்றிலும் கட்டுப்படும் வரை நம்பிக்கை கொண் டவர்களாக மாட்டார்கள்.” (4:65)
கேள்வி கேட்பதில் வெட்கப்படவும் கூடாது. அல்லது தனது அறிவையும், ஆற்றலையும் வெளிப்படுத்துவதற்காகக் கேட்கவும் கூடாது.
சிலர் ஆலிம்களைப் பரீட்சிப்பதற் காகவும், மற்றும் சிலர் தனக்கும் தெரியும் என்று காட்டிக் கொள்வதற்காகவும் கேள்வி கேட்பர். இவற்றைத் தவிர்க்க வேண்டும்.
3. கேட்கப்படும் கேள்வி:
கேட்கப்படும் கேள்வி நடைமுறையில் உள்ளதாகவும், விளக்கம் தேவையானதாகவும் இருக்க வேண்டும். அப்படி நடந்தால் என்ன செய்வது? இப்படி நடந்தால் என்ன செய்வது என்று கற்பனையில் உதிப்பதை எல்லாம் கேள்வியாக்கக் கூடாது.
இப்படிச் சிந்தித்த சிலர் நாயும், முஸ்லிம் பெண்ணும் அல்லது பன்றியும், முஸ்லிம் பெண்ணும் உறவு கொண்டு மனிதப் பிள்ளை பிறந்தால் அந்தப் பிள்ளை சுத்தமா? அசுத்தமா? என்றெல்லாம் ஆய்வு செய்து இஸ்லாத்தின் ஃபிக்ஹ் எனும் துறையையே அசிங்கப்படுத்தினர். மற்றும் சிலர் மனிதனுக்குப் பன்றி இதயம் போடலாமா? இல்லையா? என இல்லாத பிரச்சினைக்குத் தீர்வு கூறி தஃவாக் களத்தைக் களங்கப்படுத்தினர். எனவே பத்வாவுக்காகக் கேட்கப்படும் கேள்வி நடைமுறை வாழ்வுக்குத் தேவையானதாக இருக்க வேண்டும்.
4. மார்க்கத் தீர்ப்பு:
இது குர்ஆன்-ஸுன்னாவில் இருந்து பெறப்பட்டதாக இருப்பது அவசியமாகும். அப்போதுதான் அது மார்க்கத் தீர்ப்பாக இருக்கும்.
(1) பத்வாவின் தீர்ப்பு குர்ஆன்-ஸுன்னாவின் ஆதாரத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும். குர்ஆன்-ஸுன்னாவுக்கு முன்சென்ற நல்லோர்கள் அளித்த ஏகோபித்த விளக்கங்களினடிப்படையில் அந்தத் தீர்ப்பு அமைய வேண்டும். அறிஞர்களுக்கு மத்தியில் அபிப்பிராய பேதமிருந்தால் அவற்றில் மிகச் சரியானதையும், வலுவானதையும் உள்ளடக்கியதாக பத்வா அமைய வேண்டும்.
(2) பத்வா, காலத்தை உணர்ந்ததாகவும் இருக்க வேண்டும். இலகுபடுத்த வேண்டிய இடத்தில் கடுமையையோ, இறுக்கமாக இருக்க வேண்டிய இடத்தில் தளர்வையோ வழங்காத தாகவும் அது அமைய வேண்டும்.
(3) பத்வாவின் வாசகங்கள் மாற்றுக் கருத்துக்கள் வழங்கக் கூடிய விதத்திலோ, வார்த்தைகளை வைத்து விளையாடும் வண்ணமோ இருக்காமல் நேரடியாகவும், தெளிவாகவும் அமைந்திருத்தல் வேண்டும்.
(4) பத்வாக் கேட்பவரிடம் கேள்வியையும், பிரச்சினை என்ன என்பதையும் மிகத் தெளிவாகக் கேட்டறிந்து பத்வா வழங்கப்படல் வேண்டும்.
(5) கேள்வி கேட்பவர் கேட்ட கேள்விக்கு மட்டுமன்றி அவருக்கு மேலதிக விளக்கமும் தேவை என்றிருந்தால் அதையும் தெளிவுபடுத்தும் விதத்தில் பத்வா அமைந்திருத்தல் வேண்டும். “கடற்பயணம் செய்வோர் கடல் நீரில் வுழூச் செய்யலாமா?” எனக் கேட்ட போது நபி(ச) அவர்கள் அந்தக் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லாமல் “கடல் நீர் சுத்தமானது! அதில் வாழும் உயிரினங்கள் இறந்தாலும் ஆகுமானவை!” என்று மேலதிக விளக்கத்தையும் அளித்தார்கள். இந்த அடிப்படையில் கேட்கப்பட்ட கேள்விக்கும், அதனுடன் தொடர்புபட்ட கேட்கப்படாத கேள்விகளுக்கும் கூடத் தீர்வாக அமையும் விதத்தில் மார்க்கத் தீர்ப்பு அமைதல் வேண்டும்.
(6) பயனற்ற கேள்விகளுக்கு பத்வா வழங்குவதைத் தவிர்த்து விட்டுப் பயனளிக்கும் கேள்விகளுக்கு மட்டும் பதிலளிக்க வேண்டும். இப்னு மஸ்ஊத்(வ) அவர்கள் “கேட்கப்படும் கேள்விகளுக்கு எல்லாம் பதிலளிப்பவன் பைத்தியக் காரனாகத்தான் இருப்பான்!” என்று கூறியுள்ளார்கள். இமாம் ஷாஃபி(றஹ்) அவர்களிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்ட போது நீண்ட நேரம் மௌனமாக இருந்தார்கள். இது குறித்துக் கேட்ட போது இதற்குப் பதிலளிப்பதை விடப் பதிலளிக்காமல் மௌனமாக இருப்பது சிறந்ததா? என்று தீர்மானித்துத்தான் பதிலளிக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார்கள். சில கேள்விகளுக்கு மௌனமே சிறந்த பதிலாகவும், சில கேள்விகளுக்குப் புறக்கணிப்பே சிறந்த பதிலாகவும் அமையலாம்.
2:189 வசனத்தில் அவர்கள் பிறை தொடர்பாகக் கேட்கின்றனர் என்று கூறும் அல்லாஹ் பிறை தொடர்பாக அவர்கள் கேட்ட கேள்வியை விடுத்து அவர்களுக்கு பயனளிக்கும் பதிலை மட்டுமே அளிக்கின்றான். இந்த வகையில் பயனற்ற, பித்னாவை உண்டு பண்ணக்கூடிய தீய உள்நோக்கங்களுடன் கேட்கப்படக்கூடிய கேள்வி களைப் புறக்கணித்தல் வேண்டும்.
(7) பதிலளிப்பதில் அவசரத் தன்மையைத் தவிர்க்க வேண்டும். சிலர் கேள்வி முடிவதற்கு முன்னரே பதிலளிக்க முந்தி விடுவர். கேள்வி இதுதான் என்பதும், அதற்கு உரிய பதில் என்ன என்பதும் முன் கூட்டியே தெரிந்திருந்தால் பிரச்சினை இல்லை. அப்படியில்லை என்றால் தீர்ப்புக் கூறுவதில் தீவிரம் காட்டலாகாது.
(8) தெரியாத விடயம் குறித்துக் கேட்டால் அதற்குத் தெரியாது என்று தெளிவாகக் கூறுபவராக முஃப்தி இருக்க வேண்டும். இமாம் மாலிக்(றஹ்), ஷாஃபீ(றஹ்) போன்ற பெரும் பெரும் இமாம்கள் எல்லாம் தம்மிடம் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்குத் “தெரியாது!” என்பதையே பதிலாக அளித்துள்ளனர். இதை அவர்கள் கௌரவப் பிரச்சினையாகவோ, தம்முடைய ஆளுமையைக் குறைத்து விடக் கூடியதாகவோ கருதவில்லை.
(9) கோபம், பசி, கவலை, தூக்கம், களைப்பு, சுகயீனம் போன்ற நிலைகளில் பத்வா வழங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
(10) “பத்வா” எனும் மார்க்கத் தீர்ப்புக்கும், “அல்கழா” என்ற நீதிமன்றத் தீர்ப்புக்கும் இடையிலுள்ள வேறுபாட்டைப் புரிந்து கொள்ள வேண்டும். பத்வா என்பது கோட் தீர்ப்பு அல்ல. அதை யாரும் யாருக்கும் திணிக்கவும் முடியாது. நீதிபதிகள் தீர்க்க வேண்டிய விடயங்களில் தலையிடும் விதத்தில் முப்திகள் செயற்பட முடியாது.
(11) இஜ்திஹாதுக்கு உரிய விடயமொன்றில் கருத்து வேறுபாடு எழுந்தால் பத்வா வழங்கும் முப்தி நடுநிலையாகவும், தாராளத் தன்மையுடனும் தீர்ப்பு வழங்க வேண்டும்.
இமாம் இப்னு தைமிய்யா(றஹ்) அவர்களிடம் “இஜ்திஹாதுக்கு உரிய மஸ்அலாவில் உலமாக்களைத் தக்லீது செய்வோர் கண்டிக்கப்படுவார்களா?” எனக் கேட்கப்பட்ட போது, “இஜ்திஹாதுக்கு உரிய மஸ்அலாவில் சில உலமாக்களின் கருத்துப்படி செயற்படுவோர் மறுக்கப்படவும் மாட்டார்கள்! வெறுக்கப்படவும் மாட்டார்கள்! இரண்டு கருத்துகளில் எந்தக் கருத்தின் அடிப்படையில் செயற்பட்டவர்களும் எதிர்க்கப்படவும் மாட்டார்கள்!…” என்று குறிப்பிடு கின்றார்கள்.
எனவே, “மஸ்அலா இஜ்திஹாதியா” விடயத்தில் நிதானமாகத் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்.
(12) பத்வாக்கள் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி விடக் கூடாது என்பதில் கவனம் தேவை. எதிரும் புதிருமான ஃபத்வாக்கள் வெளியாகிப் பொது மக்கள் திணரும் நிலை ஏற்படக் கூடாது. இதைத் தவிர்ப்பதற்காகத் தகுதியற்றவர்கள் பத்வா வழங்கும் நிலையைத் தவிர்க்க வேண்டும்.
ஒரு அறிஞர் குறிப்பிடும் போது “திருடர்களை விட பத்வா வழங்கும் சிலர் சிறையில் இருக்கத் தகுதியானவர்கள்!” என்று குறிப்பிடுகின்றார்.
எனவே மருத்துவச் சான்றிதழ் பெறாதவர் மருத்துவம் செய்தால் தண்டிக்கப்படுவது போன்று அறிவு இல்லாமல் மார்க்கத் தீர்ப்பு வழங்கி சமூகத்துக்கு மத்தியில் பித்னாவை ஏற்படுத்துவோர் இஸ்லாமிய சட்டத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டும்.
இஸ்லாமிய அரச அமைப்பு இல்லாதவிடத்து பத்வா வழங்க முன்வருவோர் இறை அச்சத்துடன் நான் இதற்குத் தகுதியானவன் தானா? என்பதை நிதானமாகச் சிந்தித்து முடிவு செய்ய வேண்டும்.
அடுத்து, தனி நபர் பத்வாவாக இல்லாது மார்க்க விடயங்களைக் கூட்டு முயற்சியில் ஆராய்ந்து தீர்ப்புக் கூறும் வழிமுறையை ஜமாஅத்துகள் முன்னெடுக்கலாம்.
சமுதாயத்தில் இல்லாத புதுக் கருத்து ஒன்றை மக்கள் மன்றத்துக்கு முன்வைப்பதற்கு முன்னர் அந்த ஆய்வை ஏனைய அறிஞர்களின் கவனத்துக்குக் கொண்டு சென்று, அவர்களது அபிப்பிராயங்களையும் உள்வாங்கி வெளியிடும் பக்குவத்தைத் தீர்ப்பு வழங்குவோர் கடைப்பிடிப்பதன் மூலமும் இந்த பத்வாக் குழப்பங்களைத் தவிர்க்கலாம்.
ஸலஃபுஸ் ஸாலிஹீன்கள் பத்வா விடயத்தில் கடைப்பிடித்த பேணுதலும், அச்ச உணர்வும், அடுத்தவரை மதித்த போக்கும் இன்றைய உலமாக்களிடமும் இடம்பெறும் என்றால் ஃபத்வாக்களால் ஏற்படும் பித்னாக்களை ஒழிக்க முடியும்.
உங்களில் ஒருவரிடத்தில் ஒரு கேள்வி வந்தால் உடனேயே நீங்கள் பத்வா வழங்கி விடுகின்றீர்கள். இதே போன்று உமர்(வ) அவர்களிடம் வந்தால் தீர்ப்புப் பெறுவதற்காக அவர் மற்ற ஸஹாபாக்களை ஒன்றுதிரட்டி யிருப்பார்!” என அபூ ஹுஸைன்(வ) அவர்கள் கூறுகின்றார்கள்.
கலீபாக்கள் பத்வா விடயத்தில் கடைப்பிடித்த பேணுதலையும், அக்கறையையுமே இது எடுத்துக் காட்டுகின்றது. இது போன்ற ஒழுங்குகள் பேணப்பட்டால் அவசியமற்ற பல ஃபத்வா-பித்னாக்களைத் தவிர்க்க முடியும்.