இலங்கை பல்லின மக்கள் வாழும் ஒரு நாடாகும். இதில் முஸ்லிம்களாகிய நாம் இரண்டாம் சிறுபான்மையினராக வாழ்ந்து வருகின்றோம். இலங்கையின் அரசியல் யாப்பு சிறுபான்மை சமூகங்களின் சகல உரிமைகளையும் உறுதி செய்துள்ளது. ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கை வாழ் முஸ்லிம்கள் அரசியல் ரீதியிலும் நல்ல நிலையில் இருக்கின்றனர் என்றால் அது மிகையல்ல.
இலங்கை முஸ்லிம்களைப் பொருத்தவரையில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது இஸ்லாமிய அறிவிலும், இஸ்லாமிய பண்பாடுகளைப் பேண வேண்டும் என்ற உணர்விலும், தனித்துவம் காக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் உயர்ந்தே உள்ளனர். எமது மூதாதையர்களும் இஸ்லாமிய இயக்கங்களும் இந்த வகையில் போற்றத்தக்க பங்களிப்புக்களைச் செய்துள்ளனர் என்று கூறலாம்.
இலங்கை மண்ணில் முஸ்லிம்கள் கௌரவப் பிரஜைகளாகப் பார்க்கப்பட்ட காலகட்டம் ஒன்று இருந்தது. நாணயத்திற்கும், நம்பிக்கைக்கும் பெயர் போனவர்களாக முஸ்லிம்கள் நோக்கப்பட்டுள்ளனர். இந்த காலகட்டத்தில் இலங்கையில் அந்நியர்களுக்கு மத்தியில் இஸ்லாமிய பிரச்சாரம் செய்யப்பட்டிருந்தால் இன்று இலங்கையின் நிலை வேறாக இருந்திருக்கலாம். ஆரம்ப காலம் தொட்டே மாற்றுமத சகோதரர்களுக்கு இஸ்லாத்தை எத்தி வைக்கும் பணியில் நாம் போதிய அக்கறை காட்டாமலேயே இருந்துள்ளோம்.
இஸ்லாமிய பிரச்சார அமைப்புக்களின் பணிகள் மும்முரமாக நடைபெறும் இக்காலகட்டத்தில் கூட மாற்றுமதத்தவர்களுக்கான தஃவா இல்லை என்று கூறக் கூடிய அளவுக்கு அருகியே உள்ளது. முஸ்லிம்களுக்குள் தம்மைத் தக்க வைத்துக் கொள்வதற்கும், தமது அங்கத்தவர்களை அதிகரித்துக் கொள்வதற்கும் அமைப்புக்கள் அரும் பாடுபடுகின்றன. ஆனால், இலங்கையில் முஸ்லிம்களின் விகிதாசாரத்தை உயர்த்தி ஏனைய சமூகங்களுக்கு நிகராக முஸ்லிம் சமூகத்தைத் தூக்கி நிறுத்த வேண்டும் என்பதில் ஏனோ அக்கறையற்று இருக்கின்றன.
மக்கா வெற்றியின் பின்னர் சில அன்ஸாரித் தோழர்கள் இவ்வளவு காலமும் நாம் இஸ்லாத்தின் வளர்ச்சியிலேயே கவனம் செலுத்தினோம். அதனால் எமது வர்த்தகத்தையோ விவசாயத்தையோ குடும்பத்தையோ நல்ல முறையில் கவனிக்கக் கிடைக்கவில்லை. இப்போது இஸ்லாம் வெற்றி பெற்றுவிட்டது. எனவே, இனி நாம் நமது வியாபாரத்திலும் குடும்ப விவகாரத்திலும் கவனம் செலுத்துவோம் என்று பேசிக் கொண்டனர். அப்போது பின்வரும் வசனம் அருளப்பட்டது.
‘மேலும், அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள். (செலவு செய்யாமல்) அழிவின் பக்கம் உங்கள் கைகளைக் கொண்டு செல்லாதீர்கள். நன்மையும் செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோரை நேசிக்கின்றான்.’
(2:195)
தஃவாவை விடுவது நம்மை நாமே அழித்துக் கொள்வதற்குச் சமமானதாகும் என்பதையே இந்த வசனம் உணர்த்துகின்றது.
இலங்கை மண்ணில் மாற்று மதத்தவர்களுக்கு இஸ்லாத்தை எடுத்துச் சொல்லும் பணி பெருமளவில் முன்னெடுக்கப்படவில்லை. தாமாக விரும்பி இஸ்லாத்தில் இணைபவர்களுக்கு வழிகாட்டுவதற்கான முறையான ஏற்பாடுகள் கூட இலங்கையில் இல்லை என்பது வேதனையான விடயமாகும்.
சிலர் தாமதமாக இஸ்லாத்தை விளங்கிக் கொள்கின்றனர். இஸ்லாத்தில் இணைந்தவர்களுக்கு இஸ்லாத்தை முறையாகப் போதிப்பதற்கான திட்டங்கள் எம்மிடம் இல்லை. கலிமா சொல்லும் போது குளிப்புக் கடமை பற்றியும் வுழூ செய்தல், தொழுதல் பற்றியும் சில செய்திகளைச் சொல்லிக் கொடுப்பதுடன் அவர்களுக்கான வழிகாட்டல் முடிந்துவிடுகின்றது.
இஸ்லாத்தில் இணைந்து கொள்ளும் மாற்றுமத சகோதர சகோதரிகள் எமது சமூகத்தில் திருமணம் தொடர்பில் பாரிய பிரச்சினைகளைச் சந்திக்கின்றனர். அவர்கள் நவ முஸ்லிம் என்று வித்தியாசமாகப் பார்க்கப்படும் நிலை உள்ளது. அவர்களுக்குப் பெண் கொடுப்பதை ஒரு கௌரவப் பிரச்சினையாகப் பார்க்கும் போக்கும் உள்ளது.
இதனால் புதிதாக இஸ்லாத்தை ஏற்கும் ஒரு ஆணையும் புதிதாக இஸ்லாத்தை ஏற்ற ஒரு பெண்ணையும் சேர்த்துவிடுகின்றனர். இவர்கள் இருவரும் இஸ்லாமியப் பின்னணி இல்லாதவர்கள். இவர்களுக்கு முறையான கற்பித்தலும், வழிகாட்டலும் இல்லாத நிலையில் எப்படி அந்தக் குடும்பம் இஸ்லாமியக் குடும்பமாக மிளிரப் போகின்றது.
புதிதாக இஸ்லாத்தில் இணைந்த ஒருவருக்கிடையில் திருணம் செய்வித்தால் சில போது இருவருக்குமே குடும்ப ஒத்துழைப்பு இல்லாமல் இருக்கலாம். அதனால் அவர்கள் பல சவால்களைச் சந்திக்க நேரிடலாம். இவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கும் கூட தந்தை வழி உறவோ, தாய்வழி உறவோ இல்லாமல் உள ரீதியாக அவர்கள் பாதிக்கப்படலாம். எனவே, புதிதாக இஸ்லாத்தை ஏற்ற ஒருவரை இல்லறத்தில் இணைத்து விடுவது என்பது ஏற்றமான வழியாக அமையாது என்பது கவனிக்கத்தக்கதாகும்.
சிலர் கலிமா சொல்லி இஸ்லாத்திற்கு எடுத்துவிட்டாலே ஒரு கலியாணத்தைக் கட்டி வைத்துவிட்டால் எமது பொறுப்பு முடிந்துவிட்டது என்று நினைக்கின்றனர். இஸ்லாத்தை ஏற்பவர்களுக்கு இருக்கும் பிரச்சினைகள், சவால்களை எதிர்கொள்ள சரியான திட்டங்கள் எதுவும் இங்கே இல்லை.
ஒரு தனி நபரோ அல்லது குடும்பமோ இஸ்லாத்திற்கு வந்தால் அவர்களை குறைந்தது ஒரு மூன்று மாதமாவது ஓரிடத்தில் ஒன்று சேர்த்து இஸ்லாத்தைக் கற்பிப்பதுடன் பயிற்சியும் வழங்கப்பட வேண்டும். இக்காலகட்டத்தில் அவர்களின் தேவைகள் முழுமையாகப் பொறுப்பெடுக்கப்படுவதுடன் அவர்களின் பொருளாதாரத் தேவைகளும் நிறைவு செய்யப்பட வேண்டும்.
அவர்களுக்கு முறையான தொழில் வாய்ப்புக்களுக்கான ஏற்பாடுகள் செய்யப்படுதல் வேண்டும். சிலர் இஸ்லாத்தை விரும்பி ஏற்கின்றனர். ஆனால், அவர்கள் வாழும் சூழல் இஸ்லாத்தைப் பின்பற்ற ஏற்றதாக இல்லை. அவர்கள் முஸ்லிம்களுக்கு மத்தியில் குடியமர்த்தப்படும் தேவை ஏற்படலாம்.
இஸ்லாத்தை ஏற்ற ஒரு பெண் குட்டை கவுன் அணிந்த நிலையில் இருந்தார். இது பற்றி அவரே கூறும் போது, ‘எனக்கு அபாயா அணிய ஆசைதான். நான் என் கணவரின் குடும்பத்துடன் வாழ்கின்றேன். அவர்கள் எம்முடன் சகஜமாகப் பழகுகின்றார்கள். வீட்டுக்கு முன்னால் உள்ள டெப்பில்தான் நான் குளிக்கிறேன். அப்படிப் பகிரங்கமாகக் குளித்துவிட்டு அபாயா அணிய எனக்கு வெட்கமாக இருக்கின்றது’ என அவர் கூறினார்.
இஸ்லாத்தை ஏற்றவர்கள் இஸ்லாத்தைப் பின்பற்றத்தக்க சூழலுக்கு மாற்றப்பட வேண்டியதன் அவசியத்தை இது எடுத்துக்காட்டுகின்றது.
வெளிநாடுகளில் வேலை செய்யும் சகோதரர்கள் பலரும் இஸ்லாத்தை ஏற்கின்றனர். சிலர் இஸ்லாத்தை ஏற்பதன் மூலம் சில சலுகைகளைப் பெறலாம் என்ற எண்ணத்தில் இஸ்லாத்தை ஏற்கலாம். ஆனால், பலரும் இஸ்லாத்தை விரும்பி ஏற்கின்றனர். ஆனால், அவர்கள் நாட்டுக்கு வந்தால் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடுகின்றது. அவர்கள் திருமணம் முடித்தவர்களாக இருந்தால் மனைவி இஸ்லாத்தை ஏற்றிருப்பார். இங்கே கணவர் காபிராக இருப்பார். அல்லது இதற்கு மாற்றமான நிலை இருக்கும். இப்போது இஸ்லாத்தை விடுவதா அல்லது திருமண உறவை விடுவதா என்ற திண்டாட்டத்திற்கு அவர்கள் உள்ளாகின்றனர்.
வெளிநாடுகளில் இஸ்லாத்தை ஏற்பவர்கள் பற்றிய தகவல்களைப் பெற்று அவர்கள் இங்கே வருவதற்கு முன்னரே ஓரளவு அவர்களது குடும்பத்திற்கு இஸ்லாத்தை எடுத்துச் சொல்வதற்கான எந்த ஏற்பாடும் எம்மிடம் இல்லை.
சில இளம் பெண்கள் வெளிநாட்டில் இஸ்லாத்தை ஏற்று அதை அவர்கள் இரகசியமாக வைத்துக் கொள்கின்றனர். இலங்கை வந்த பின்னர் வீட்டில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. இந்த சூழலில் அவர்கள் தமது மார்க்கத்தைப் பாதுகாக்க நினைத்தால் அவர்களுக்கு முறையான திருமண ஏற்பாட்டைச் செய்யக் கூட எமது சமூகத்தில் வக்கில்லாத துர்ப்பாக்கிய நிலை நீடிக்கின்றது.
இந்த அடிப்படையில் இஸ்லாத்தை ஏற்பவர்களைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வதற்கான நிலை கூட சமூகத்தில் இல்லாதிருப்பது வேதனை தரும் நிகழ்வாகும். நாமாக தஃவா செய்து இஸ்லாத்தைப் பரப்பவும் இல்லை. தாமாக வருபவர்களையும் நாம் தக்கவைத்துக் கொள்வதும் இல்லை என்றிருந்தால் சமூகம் எப்படி வெற்றி பெறும் என்று சிந்தித்துப் பாருங்கள்! சிலரின் செயற்பாடுகள் வந்தவர்களையும் விரட்டி விடுவது போன்று அமைந்துவிடுகின்றது.
எனவே, நாம் அந்நிய சமூகத்தினரிடையேயான தஃவாவில் கவனம் செலுத்துவதுடன் இஸ்லாத்தை ஏற்பவர்களுக்கான முறையான பயிற்சிகள், வழிகாட்டல்களுக்கான திட்டங்கள் குறித்தும் தீர்க்கமாக சிந்திக்க வேண்டியுள்ளது. இதைத் தணித்து செய்ய முடியாது என்றால் இதற்கான கூட்டு முயற்சியையாவது கைக் கொள்ளலாம். இது காலத்தின் கட்டாயமாகவும் சன்மார்க்கக் கடமையாகவும் உள்ளது என்பதைக் கவனத்தில் கொண்டு கடமையாற்றுவோமாக!