பாரிஸ் தாக்குதலும் பயங்கரவாதப் பட்டமும்
பாரிஸில் பயங்கரவாதத் தாக்குதல் தொடுக்கப்பட்டது. ISIS தீவிரவாதிகள் இந்தத் தாக்குதலைத் தொடுத்ததாக ஒத்துக்கொண்டுள்ளார்கள். இந்தத் தாக்குதலின் மூலம் ஐரோப்பிய சமூகத்தில் இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் வெறுப்பும் கோபமும் ஏற்பட்டுள்ளது. பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் பள்ளிவாயில்கள் தாக்கப்பட்டன, குர்ஆன் எரிக்கப்பட்டது.
அமெரிக்காவின் ஜனாதிபதி வேட்பாளர் ‘டொனால்ட் ட்ரம்ப்” இச்சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தி தனது முஸ்லிம் வெறுப்புணர்வை வெளிப்படுத்தி ஆதரவு தேட முற்பட்டுள்ளார். அமெரிக்காவில் உள்ள ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் வெளியேற்ற வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மைக் காலமாக ஐரோப்பாவில் இஸ்லாம் வெகு வேகமாகப் பரவி வருகின்றது. இஸ்லாத்தின்பால் ஈர்க்கப்படும் மக்களுக்கு இஸ்லாம் பற்றிய அச்ச உணர்வை ஊட்டுவதற்காக திட்டமிட்டு தொடுக்கப்பட்ட ஒரு தாக்குதலாகவே இதைக் கருதவேண்டியுள்ளது.
இஸ்லாத்தின் எதிரிகள், தமது அற்பத்தனமான அரசியல் ஆதாயங்களை அடைந்து கொள்வதற்காகவும் தமது இரக்கமற்ற அரக்கத்தனமான நடவடிக்கைகளை நியாயப்படுத்திக் கொள்வதற்காகவும், தாமே சில தாக்குதல்களை நடாத்திவிட்டு அதை முஸ்லிம்கள் மீது சுமத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
கோத்திரா ரயில் எரிப்பு நடந்தது. அதில் ஐம்பதிற்கும் மேற்பட்ட இராம பக்தர்கள் இறந்தனர். இதை மையமாகக் கொண்டு குஜராத் கலவரம் நடந்தது. அதில் 2500 முஸ்லிம்கள் கருவறுக்கப்பட்டனர். கோடிக்கணக்கான சொத்துக்கள் அழிக்கப்பட்டன, சூறையாடப்பட்டன. ஆனால், எல்லாம் முடிந்த பின்னர், கோத்திரா ரயில் எரிப்பு முஸ்லிம்களால் நடாத்தப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இந்துத்துவ அமைப்புக்கள் கலவரத்திற்கான சகல ஏற்பாடுகளையும் செய்துவிட்டு கலவரத்தை நியாயப்படுத்த திட்டமிட்டு தாமே இந்துக்கள் சிலரை எரித்து தமது கொலை வெறியைத் தீர்த்துக் கொண்டனர்.
இவ்வாறே அமெரிக்காவின் செப்டம்பர் 11 தாக்குதலை சாட்டாக வைத்துத்தான் ஆப்கான் அழிக்கப்பட்டது. அல்கைதா இத்தாக்குதலை நடாத்தியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. இஸ்லாம் பயங்கரவாதமாகக் காட்டப்பட்டது. ஆப்கானும் அழிக்கப்பட்டு உஸாமாவும் கொல்லப்பட்டுவிட்டார். ஆனால், செப்டம்பர் 11 தாக்குதல் உஸாமாவினால் நடத்தப்படவில்லை. அமெரிக்காவும் இஸ்ரேலும் திட்டமிட்டு நடாத்திக் கொண்ட தாக்குதல் இது. தமது அற்பத்தனமான அரசியல் ஆதாயத்தை அடைந்து கொள்வதற்காக சொந்த நாட்டு மக்களையே அழித்தது மட்டுமல்லாமல் இஸ்லாத்தின் மீதும், முஸ்லிம்கள் மீதும் வெறுப்பை விதைத்து ஒரு நாட்டையே அழித்த பயங்கரவாதிகள் உலகத் தலைவர்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். ‘பயங்கரவாதிகள்” என்ற பட்டத்தை முஸ்லிம்கள் சுமந்து கொண்டிருக்கின்றனர்.
சொந்த நாட்டு மக்களையே கொன்றார்கள், உலகையே ஏமாற்றினார்கள், இதை அடிப்படையாக வைத்து அப்பாவி முஸ்லிம்களை அழித்தார்கள் என்ற உண்மை தெரிந்த பின்னர் கூட எந்த அமெரிக்கனுக்கும் தம்மை ஏமாற்றிய சரிகார தலைவர்கள் மீது வெறுப்பு வரவில்லை. முஸ்லிம்கள் மீது ஏற்படுத்தப்பட்ட வெறுப்புத் தீ அணையவும் இல்லை.
ஸதாம் ஹுஸைனிடம் இரசாயன ஆயுதம் இருக்கின்றது என்ற ஒரு பொய்யைச் சொல்லி ஈராக் மீது போர் தொடுக்கப்பட்டது. அதனால் ஆறு இலட்சத்திற்கும் அதிகமான ஈராக்கிய இளம் சிட்டுக்கள் சிதைக்கப்பட்டனர். பண்டைய நாகரிகத்தின் தொட்டிலாகத் திகழ்ந்த தேசம் சிதைக்கப்பட்டு கோடான கோடி சொத்துக்கள் சேதமாக்கப்பட்டன. எல்லாம் முடிந்து அவசர அவசரமாக தீர்ப்பும் எழுதப்பட்டு சதாமும் கொல்லப்பட்டுவிட்டார். இப்போது ஈராக் போரின் முக்கிய சூத்திரதாரிகளில் ஒருவரான ‘டொனி பிளேயர்” ஈராக்கில் தாம் தவறாகப் போரிட்டுவிட்டதாக சிரித்துக் கொண்டே சொல்கின்றார். இந்த அரக்க குணம் கொண்டவர்கள் எல்லோரும் நாகரிகமானவர்களாக காட்சி தரும் போது இஸ்லாத்தின் மீது மட்டும் பயங்கரவாதப் பட்டம் சூட்டப்படுகின்றது. பொய்யான தகவலின் அடிப்படையில் இலட்சக்கணக்கான மக்களை அழித்த அமெரிக்கா, பிரிட்டன் தலைவர்கள் மீது எவருக்கும் வெறுப்பு ஏற்படவில்லை. சதாம் ஹுஸைன் மீது ஏற்பட்ட வெறுப்பு தணியவுமில்லை. இப்படி உலக அரசியல் நியாய உணர்வு இல்லாமல் நகர்ந்து கொண்டிருக்கின்றது என்பதை எண்ணிப் பார்க்கும் போது வேதனையாகவும் வேடிக்கையாகவும் உள்ளது.
ஊடகங்களின் ஊளை:
பிரான்ஸ் தாக்குதல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. முஸ்லிம் அறிஞர்களோ, அமைப்புக்களோ ஒரு போதும் இதை ஏற்கப்போவதில்லை. இதைச் செய்த ISIS அமைப்பை முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் அமெரிக்கா, இஸ்ரேல் ஏஜென்டுகளாகவே பார்க்கின்றனர். இருப்பினும் இதை வைத்து ஊளையிடும் ஊடகங்கள் ஈராக்கிலும், ஆப்கானிலும், லிபியாவிலும், பலஸ்தீனிலும் அமெரிக்க மற்றும் பிரித்தானிய இராணுவத்தினால் கொடூரமான கொலைகள், முன்னெடுக்கப்பட்ட போது கொக்கரிக்காமல் இருந்தது ஏன்? சுமார் 300 பேரைக் கொன்ற ISIS தீவிரவாதிகள் என்றால் இத்தாக்குதலைச் சாட்டாக வைத்து ர‘ஷ்யா, அமெரிக்கா, பிரான்ஸ் இராணுவங்கள் சிரியா மீது குண்டு மழை பொழிந்து சிரியா மக்களைக் கொன்று குவிப்பது பயங்கரவாதமில்லையா? இந்த நாட்டு இராணுவங்கள் ISIS களை அழித்தால் அதை நாங்கள் மனப்பூர்வமாக ஆதரிப்போம். ISIS ஐ விட்டு விட்டு அப்பாவிப் பொதுமக்களை இவர்கள் அழிப்பதை ஏன் இந்த ஊடகங்கள் எதிர்க்கவில்லை?
இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் பயங்கரவாத பட்டம் சூட்டும் ஊடகங்களே! முதலாம், இரண்டாம் உலகப் போர்களை ஆரம்பித்து இலட்சக் கணக்கில் மனித உயிர்களை பலியெடுத்தவர்கள் மீது ஏன் பயங்கரவாதிகள் என்ற பட்டம் சூட்டப்படவில்லை?
ஹிரோஷீமா, நாகஸாகி மீது அணுகுண்டுகளை வீசி மனித இன விரோதச் செயலில் ஈடுபட்ட அநியாயக்காரர்களுக்கு ஏன் இந்தப் பட்டம் சூட்டப்படவில்லை? வடஅமெரிக்காவிலும், தென்அமெரிக்காவிலும் இலட்சக்கணக்கான செவ்விந்தியர்களைக் கொன்று குவித்தவர்களுக்கு இந்தப் பட்டம் இல்லையா?
சுமார் இருபது மில்லியன் ஆதிக் குடிவாசிகளை அவுஸ்திரேலியாவில் கொன்ற கொலைகாரர்களை ஏன் பயங்கரவாதிகளாக நீங்கள் அடையாளப்படுத்தவில்லை?
பலஸ்தீன், ஆப்கான், சிரியா, ஈராக் போன்ற நாடுகளில் இன்று வரை கொத்துக் கொத்தாகக் குழந்தைகளைக் கொடூரமாகக் கொன்று குவிக்கும் கொடூர மனம் கொண்டவர்களை ஏன் நீங்கள் பயங்கரவாதிகள் என்று கூறவில்லை?
முஸ்லிம்கள் நடுநிலைமையானவர்கள். ISIS, பொகோஹராம் போன்ற அமைப்புக்கள் தம்மை இஸ்லாமியப் போராளிகளாகக் காட்டிக் கொண்டாலும், அவர்களை முஸ்லிம்கள் பயங்கரவாதிகளாகவே பார்க்கின்றனர். முஸ்லிம்களைக் கொன்று குவிக்கும் இந்த அக்கிரமக்கார ஆட்சியாளர்களைப் பயங்கரவாதிகளாகப் பார்க்க முடியாத அளவுக்கு உங்கள் உள்ளங்கள் கல்லாகிவிட்டனவா?
பாரிஸ்:
பாரிஸ் தாக்குதலை நாம் கண்டிக்கின்றோம். ISIS தீவிரவாதிகளை விட பாரிஸ் கொடூரக் கொலைகளைச் செய்துள்ளது என்பதையும் இந்த இடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
பிரான்ஸின் இராணுவம் ISIS தீவிரவாதிகளைவிடக் கொடூரமான அமைப்பில் இலட்சக்கணக்கான அல்ஜீரியர்களைக் கொன்று குவித்துள்ளது. மூக்கு மற்றும் காதுகளை அறுப்பது, தலைகளை வெட்டி வேறாக்குவது, கூட்டுக் கற்பழிப்பு…. எனக் மிருகத்தனமான கொடூர கொலைக்களத்தைக் கண்ட நாடுதான் பிரான்ஸ். இன்று ISIS தீவிரவாதிகளை மிருகத்தனமானவர்களாகச் சித்திரிப்பவர்கள், இத்தகைய கொடூர வரலாறுகளை மட்டும் வசதியாக மறந்துவிடுகின்றனர்.
பிரான்ஸ் தாக்குதல் ஏன்?:
பிரான்ஸ் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலால் இஸ்லாத்திற்கோ அல்லது முஸ்லிம்களுக்கோ எந்த இலாபமும் இல்லை. இதன் மூலம் இஸ்லாம் தீவிரவாதமாக சித்தரிக்கப்படுகின்றது. இஸ்லாத்தின் மீது வெறுப்புணர்வு ஏற்படுத்தப்படுகின்றது. எனவே, இதன் மூலம் இஸ்லாமிய விரோதச் சக்திகளுக்கே இலாபம் உண்டு!
சிரியா அகதிகள் விவகாரம், ஐரோப்பிய உலகை இறங்கிவரச் செய்துள்ளது. சிரிய அகதிகளுக்காக வாசலைத் திறந்துவிடும் நிர்ப்பந்த நிலை அவர்களுக்கு ஏற்பட்டு வந்தது. சிரியா அகதிகளைப் புறக்கணிப்பதற்கான நியாயமான காரணத்தை இந்தத் தாக்குதல் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்படுத்தியுள்ளது.
சிரியா மீது அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் போன்ற நாடுகள் அழிவுப் போரை நடாத்தி வருகின்றன. அவர்கள் செய்யும் மிருகத்தனமான தாக்குதல்களுக்கு இந்த பிரான்ஸ் தாக்குதல் ஒரு நியாயத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
இப்படி சுற்றிச் சுற்றி எந்தப் பக்கம் நோக்கினாலும் இந்தத் தாக்குதலால் இஸ்லாத்திற்கோ, முஸ்லிம்களுக்கோ எந்த இலாபமும் இல்லை. இதனால் இஸ்லாமிய விரோத சக்திகள்தான் ஆதாயம் அடைகின்றார்கள் என்றால், இந்தத் தாக்குதலை இஸ்லாமியப் பற்றோ முஸ்லிம்கள் மீது நேசமோ கொண்டவர்கள் செய்திருக்க முடியாது. இஸ்லாத்தின் எதிரிகளோ அல்லது முஸ்லிம்களின் பெயரில் இயங்கும் இஸ்லாமிய விரோதிகளால் இயக்கப்படும் அமைப்போதான் செய்திருக்க வேண்டும்.
இந்த வகையில் ISIS தீவிரவாதிகளை பெரும்பாலான முஸ்லிம்கள் இஸ்லாத்திற்கு எதிரான அமைப்பாகவே பார்க்கின்றனர். இஸ்லாமிய அறிஞர்களும் முஸ்லிம் நாடுகளும் இவர்களைத் தீவிரவாதிகளாகவும் இஸ்லாமிய கருத்துக்களுக்கு முரணான அமைப்பாகவுமே கணிக்கின்றனர். இதை முஸ்லிம் அல்லாத மக்கள் கவனத்திற் கொள்ள வேண்டும்.
ஆழ்ந்த அரசியல் அனுபவமும், உலக அரசியல் பற்றிய துல்லிய பார்வையுமுடைய கியூபாவின் முன்னாள் அதிபர் ‘பிடல் கஸ்ட்ரோ” ‘இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கள்ளக் குழந்தைதான் ISIS அமைப்பு” என்று கூறியிருப்பது கவனிக்கத்தக்கதாகும்.
இஸ்லாத்தின் எதிரிகள் இஸ்லாமியப் பெயர்களில் சில அமைப்புக்களை உருவாக்கி அவற்றுக்கு ஆயுதமும், பணமும் கொடுத்து ஊடகங்களில் பிரபலத்தையும் கொடுத்து இயக்கி வருகின்றனர். இவர்கள் மூலம் தமது திட்டங்களை முன்னெடுக்கின்றனர். ISIS அமைப்பும் இஸ்லாமிய எதிரிகளின் செயற்பாடுகளுக்கு வியூகங்களை உருவாக்கிக் கொடுக்கும் முஸ்லிம் விரோத அமைப்பேயாகும் என்பதே இஸ்லாமிய அறிஞர்களின் கருத்தாகும்.
பிரான்ஸ் அண்மையில் பலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் ஒரு முடிவை வெளியிட்டது. எனவே, பிரான்ஸிற்கு ஒரு சூடு வைக்க இஸ்ரேல் விரும்பியிருக்கலாம். அதன் விளைவாகவே இத்தாக்குதல் நடாத்தப்பட்டிருக்கவும் வாய்ப்புள்ளது. சிரியா மீது பிரான்ஸ் தீவிர தாக்குதலை நடாத்தி வருவதால் சிரியா பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி போரின் வலியை பிரான்ஸ் மக்களும் அனுபவிக்க வேண்டும் என்று தீவிரவாதிகள் நிலைத்திருக்கலாம். போரை பிரான்ஸ் வரை நீட்டி பிரான்ஸ் மக்களூடாக சிரியா மீதான தாக்குதலில் இருந்து பிரான்ஸைப் பின்வாங்கச் செய்ய அவர்கள் திட்டமிட்டிருக்கலாம்.
எது எப்படியிருப்பினும் பாரிஸ் தாக்குதலுடன் தொடர்புபட்ட அப்துஸ்ஸலாம் சகோதரர்கள் மதுபான வியாபாரிகள். பெல்ஜியத்தில் அவர்களுக்குச் சொந்தமான மதுபானக் கடைகள் உள்ளன என்ற தகவல்கள் இணையதளங்களில் வெளிவந்துள்ளது.
(http://www.vkalathur.in/2015/11/blog-post 974.html?m=1))
பெல்ஜியம் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் இஸ்லாத்தின் மீது பற்றுள்ள உண்மை முஸ்லிம்கள் அல்லர் என்பது இதன் மூலம் உறுதியாகின்றது. இஸ்லாமிய விரோதச் செயற்பாடுகளில் ஈடுபாடு கொண்ட இத்தகையவர்களின் செயல்களை வைத்து இஸ்லாத்தைப் பயங்கரவாதமாகப் பார்ப்பது எப்படி நியாயமாகும் என்று சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
இந்த இடத்தில் பிரித்தானியப் பிரதமர் ‘டேவிட் கெமரூன்” அவர்களின் கருத்து குறிப்பிடத்தக்கதாகவும், நியாயமானதாகவும் அமைந்துள்ளது.
‘இரத்த வெறியர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முஸ்லிம்கள் பொறுப்பல்லர்.” இந்த நியாயமான நிலைப்பாட்டிற்கு உலக ஊடகங்கள் வரவேண்டியுள்ளது.
மலேசியாவின் முன்னாள் பிரதமரின் கூற்றையும் உலக ஊடகங்கள் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.
‘பாரிஸ் தாக்குதலின் காரணமாக பலி தீர்க்கும் வகையில் பிரான்ஸியர்கள் அல்குர்ஆனை எரித்துக் கொண்டாடினர். அவர்களது விமானங்கள் மாலியின் கிராமங்களை அழித்த போது, முஸ்லிம்கள் எந்தவொரு பைபிளையும் எரிக்கவில்லை. இஸ்லாம் நாகரிகமானது.”
இந்த நாகரிகமான போக்கை நோக்கி உலக மக்களை உந்தித் தள்ளவேண்டியது ஊடகங்களின் பொறுப்பாகும்.
மனித இனத்திற்கு எதிராகச் செயற்படும் அனைவரையும் கண்டிக்க வேண்டும். அது முஸ்லிம் பெயர் தாங்கிய அமைப்புக்களால் தொடுக்கப்பட்டாலும் கண்டிக்கப்பட வேண்டும் ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்டாலும் கண்டிக்கப்பட வேண்டும்.
பாரிஸ் தாக்குதலை முஸ்லிம்கள் கண்டிக்கின்றனர். அதைச் செய்தவர்களை பயங்கரவாதிகளாகவே முஸ்லிம்கள் பார்க்கின்றனர். பலஸ்தீன், ஈராக், சிரியா மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களைக் கண்டிக்க நியாய உள்ளம் கொண்ட நீங்கள் தயாரா? அதைச் செய்பவர்களை பயங்கரவாதிகளாக அறிவிக்க உங்களால் முடியுமா? முடியவில்லை என்றால் உங்கள் உள்ளத்திலும் பயங்கரவாதம் உள்ளது! முஸ்லிம்களுக்கு எதிரான பயங்கரவாத செயல்களை உங்கள் இதயம் ஏற்றுக் கொள்கின்றது! முஸ்லிம்கள் என்ற பெயரில் சிலர் செய்யும் பயங்கரவாதத்தை மட்டுமே உங்கள் இதயம் கண்டிக்கின்றது என்பதே அர்த்தமாகும்!