கத்னாச் செய்தல்:
ஆண் குழந்தைகளுக்கு ‘கத்னா’ செய்வது குழந்தையின் ஆன்மீகத்திற்கும், ஆண்மைக்கும், ஆரோக்கியத்திற்கும் ஊக்கமளிக்கும் ஒரு முக்கிய ஸுன்னாவாகும். ஆண்களுக்குப் போன்று பெண் பிள்ளையின் ‘கத்னா’ அவசியப்படுத்தப்படவில்லை. ஆனால் பெரும் தடை என்று கூறுவதற்கும் இல்லை.
சில நாடுகளில் பெண் பிள்ளைகளுக்குக் கூடப் பத்து வயது தாண்டிய பின்னர் ‘கத்னா’ச் செய்யும் வழக்கமுள்ளது. இதனால் சிலபோது பாரிய பாதிப்புக்களும் ஏற்படுகின்றன. இந்நடைமுறைகள் நமது நாட்டில் இல்லை என்பது திருப்தி தரும் அம்சமாகும்.
முன்னைய காலங்களில் ஆண் பிள்ளைகளுக்குச் செய்யும் ‘கத்னா’வையும் ‘ஸுன்னத்துக் கலியாணம்’ என்ற பெயரில் பெரும் அளவு விழாவாக எடுப்பதும், ‘கத்னா’வை முன்னிட்டுப் பல்வேறுபட்ட சடங்குகளை அரங்கேற்றுவதும் வழக்கமாக இருந்தது. எனினும் மார்க்க அறிவு வளர்ச்சி, பொருளாதார நெருக்கடி, மருத்துவ முன்னேற்றம் என்பன இந்நிலையை மாற்றி குழந்தை பிறந்த சில நாட்களிலேயே மருத்துவர் மூலம் ‘கத்னா’வை சர்வ-சாதாரணமாகச் செய்து விடும் வழிமுறை வளர்ந்து வருவது வரவேற்கப்பட வேண்டிய அம்சமாகும்.
குழந்தைகளினால் ஏற்படும் சிரமங்களை சகித்தல்:
சில பெற்றோரும், பெரியவர்களும் குழந்தைகள் சிறுநீர் கழிப்பர்; அசுத்தமாக இருப்பர் என்பதால் அவர்களைத் தூக்கிக் கொஞ்சுவதில்லை. அவர்களுடன் நெருக்கமாக இருப்பதும் இல்லை. இது தவறாகும்.
ஆயிஷா(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;
நபி(ஸல்) அவர்களிடம் குழந்தைகள் அழைத்து வரப்படுவார்கள். நபியவர்கள் அக்குழந்தைகளுக்காக ‘துஆ’ச் செய்வார்கள். ஒரு ஆண் குழந்தை நபியவர்களிடம் கொண்டு வரப்பட்டது. நபியவர்களின் ஆடையில் அக்குழந்தை சிறுநீர் கழித்து விட்டது. நபியவர்கள் அந்த இடத்தில் தண்ணீர் தெளித்தார்கள். அதைக் கழுவவில்லை. (முஸ்லிம்)
உம்மு கர்ஷ் அல்ஹுஸாயிய்யா(ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்;
நபி(ஸல்) அவர்களிடம் ஒரு ஆண் குழந்தை கொண்டு வரப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் அக்குழந்தையைத் தூக்கிய போது அது நபி(ஸல்) அவர்கள் மீது சிறுநீர் கழித்து விட்டது. நபி(ஸல்) அவர்கள் சிறுநீர் பட்ட தமது ஆடையில் நீரைத் தெளித்தார்கள். பின்னர் ஒரு பெண் குழந்தை கொண்டு வரப்பட்டது. அக்குழந்தையும் நபி(ஸல்) அவர்கள் மீது சிறுநீர் கழித்த போது நபி(ஸல்) அவர்கள் ஆடையில் சிறுநீர் பட்ட இடத்தைக் கழுவினார்கள். (அஹ்மத்)
நபி(ஸல்) அவர்களின் அடிமையாக இருந்த ஸைத்(ரழி) அவர்களது மகன் உஸாமா(ரழி) அவர்கள் பார்ப்பதற்குக் கண்ணங்-கரேர் என்று இருப்பார். இவருடைய தாயார் ஒரு ‘நீக்றோ’ அடிமையாவார்கள். நாம் அழகான பிள்ளைகள் மீதுதான் அன்பைச் சொரிவோம். அவர்களைத்தான் அள்ளி அணைப்போம். ஆனால் நபி(ஸல்) அவர்கள் பார்க்கப் பிடிக்காத பிள்ளைகளுடனும் பாசத்தைப் பொழிந்து பழகுவார்கள்.
இந்த உஸாமா(ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்;
நபி(ஸல்) அவர்கள் என்னைத் தூக்கி அவர்களது ஒரு தொடை மீதும், நபி(ஸல்) அவர்களது பேரன் ஹஸன்(ரழி) அவர்களைத் தூக்கி ஒரு மடியிலும் அமர்த்தி, பின்னர் எம்மிருவரையும் அணைத்துக் கொண்டு…
أللهم ارحمهما فانى ارحمهما
‘யா அல்லாஹ்! இவ்விருவர் மீதும் நீ கருணை காட்டுவாயாக! நானும் இவ்விருவர் மீதும் அன்பு காட்டுகின்றேன்’ எனப் பிரார்த்தித்தார்கள். (புகாரி)
எனவே, குழந்தைகளுடன் நெருங்கிப் பழக வேண்டும். அவர்களை மடியில் அமர்த்துவது, தூக்குவது, அவர்கள் மீது அன்பை வெளிப்படுத்துவது என்பன குழந்தைகளின் ஆளுமை விருத்திக்குப் பெரிதும் உதவும். நாம் பாதுகாப்பான, அன்பான சூழலில் வாழ்கின்றோம் என்ற உணர்வு அவர்களுக்குப் பெரிதும் உத்வேகம் அளிக்கும்.
கண்ணியப்படுத்துவதும், கண்ணியமாக நடத்துவதும்:
குழந்தைகளைப் பெற்றோரும், பெரியோரும் கண்ணியப்படுத்த வேண்டும். அவர்களுடன் கண்ணியமாகப் பழக வேண்டும். இதன் மூலம் கண்ணியமான நடத்தைகளைப் பிள்ளைகள் பழகிக் கொள்வார்கள். அவர்களை அவர்களுக்கென்றே உள்ள பெயர்கள் கொண்டு அழைப்பதும் அவர்களுக்கு உட்சாகமூட்டும்; அத்துடன் மகிழ்வளிக்கும்.
நபி(ஸல்) அவர்கள் அபூதல்ஹா(ரழி) அவர்கள் வீட்டுக்கு அடிக்கடி செல்வார்கள். அவர்களது மகன் அபூஉமைரை நபி(ஸல்) அவர்கள் மிக அன்புடன் ‘யா அபா உமைர்!’ என அழைப்பார்கள். இந்த அபூஉமைர் ஒரு குருவி வளர்த்து வந்தார். அது இறந்த போது பெரிதும் கவலைப்பட்டார். நபி(ஸல்) அவர்கள் இதை அறிந்து, ‘யா அபா உமைர்! பஅலன் னுஅய்ர்?’ (அபூ உமைரே! உங்கள் குருவிக் குஞ்சுக்கு என்னவானது) என இலக்கிய நயம் கொஞ்ச அவரிடம் பேசி அவரை மகிழ்வித்தார்கள்.
எனவே, சிறுவர்களைச் ‘சின்னப் பிள்ளைகள் தானே!’ எனக் குறைத்து மதிப்பிடும் வகையில் அழைக்காமல் அவர்களை கௌரவித்தே அழைக்க வேண்டும். இது அவர்களுக்குள்ளேயே ‘நாம் கௌரவமானவர்கள்’ என்ற உணர்வை ஊட்டும். இதன் மூலம் அவர்களது ஆளுமை வளர்வதுடன் தமது கௌரவத்தையும், கண்ணியத்தையும் பாதுகாக்க வேண்டும் என்பதால் பண்பாட்டுடன் நடக்க முற்படுவர்.
எனவேதான் அடிமைச் சிறுவர்களை ‘அடிமை’ என அழைக்காமல், ‘குலாம்’ (சிறுவனே!) என அழைக்குமாறு நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (முஸ்லிம்)
நெருக்கமான இறுக்கமான உறவு:
நபி(ஸல்) அவர்கள் அனைத்துச் சிறுவர்-சிறுமியருடனும் நெருக்கமான உறவு கொண்டிருந்தார்கள். சிறுவர்களைச் சந்திக்கும் போது ஸலாம் கூறுவார்கள். அவர்களுடன் உரையாடுவார்கள். அவர்களுக்கு ‘துஆ’ச் செய்வார்கள். சிறுவர்கள் உரிமையுடன் தன்னுடன் பழகுவதற்கு இடமளிப்பார்கள். இந்த உறவின் நெருக்கத்தின் காரணமாக தொழும் போது கூடக் குழந்தைகளைச் சுமந்து கொண்டு தொழுதுள்ளார்கள்.
அபூகதாதா அல்அன்ஸாரி(ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்;
உமாமா(ரழி) அவர்களைச் சுமந்து கொண்டு தொழுபவராக நபி(ஸல்) அவர்கள் இருந்தார்கள். (உமாமா நபியவர்களது பேத்தியாவார்கள். நபியவர்களின் மகள் ஸைனப்(ث) அவர்களது குழந்தையே உமாமாவாகும்.) ஸுஜூது செய்யும் போது பிள்ளையைக் கீழே வைப்பார்கள். எழும் போது சுமந்து கொள்வார்கள். (புகாரி)
நபி(ஸல்) அவர்கள் சிறுவர்-சிறுமியருடன் நெருக்கமாகவும், அன்பாகவும் பழகியதுடன் அவர்களுடன் விளையாடவும் செய்தார்கள். குழந்தைகளை முதுகில் ஏற்றிக் குதிரைச் சவாரி எனத் தானே தவழ்ந்து அவர்களை மகிழ்விப்பார்கள். இதனால் பழக்கப்பட்ட நபிகளாரின் பேரர் ஹஸன் அல்லது ஹுஸைன் ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் தொழுகையில் ஸுஜூதில் இருக்கும் போதே அவர் சவாரிக்கத் தயாராகின்றார் என எண்ணி அவரின் முதுகில் ஏறிய சம்பவங்களும் உள்ளன.
நபி(ஸல்) அவர்கள் ஒரு மஃரிப் அல்லது இஷாத் தொழுகையின் போது நீண்ட நேரம் ஸுஜூது செய்தார்கள். தொழுகை முடிந்ததும் ‘அல்லாஹ்வின் தூதரே! என்றுமில்லாதவாறு நீண்ட நேரம் ஸுஜூது செய்தீர்கள். உங்களுக்கு வஹீ வருகின்றதோ! என நாம் நினைத்தோம். அல்லது ஏதோ நடந்து விட்டதோ! என எண்ணினோம் எனக் காரணங்களைக் கூறினர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘அப்படி ஒன்றுமில்லை. எனது பேரன் என் முதுகில் ஏறி விட்டார். அவர் தானாக இறங்கும் வரை நானாக எழுந்து அவருக்கு அதிர்ச்சியூட்டுவதை நான் வெறுத்தேன்’ (எனவேதான் தாமதித்தேன்) எனக் கூறினார்கள்.
(ஹதீஸின் சுருக்கம் – நஸாஈ, அஹ்மத்)
இந்த ஹதீஸ், நபி(ஸல்) அவர்கள் குழந்தைகளுடன் எவ்வளவு நெருக்கமான உறவை வைத்திருந்தார்கள் என்பதை எடுத்துக் காட்டுகின்றது.
அத்துடன் நபி(ஸல்) அவர்கள் குழந்தைகளுடன் பழகும் போது தானும் ஒரு குழந்தையாக மாறி, அவர்களுடன் விளையாடி இருப்பதையும் எடுத்துக் காட்டுகின்றது. அடுத்து, ஒரு குழந்தையை அதிர்ச்சியடையச் செய்யக் கூடாது என்பதற்காக ஒரு ஜமாஅத்துத் தொழுகையின் ஸுஜூதையே நபியவர்கள் நீட்டியுள்ளார்கள். எனவே குழந்தைகளை அதிர்ச்சியடையச் செய்வதோ, பயமூட்டுவதோ தவறு என்பதையும் இது எடுத்துக் காட்டுகின்றார்கள். எமது தாய்மார்கள் குழந்தைகளைத் தூங்க வைப்பதற்காகவும், உண்ண வைப்பதற்காகவும் ‘நாய் வருகிறது!’, ‘பேய் வருகிறது!’ எனப் பயமூட்டி அவர்களின் ஆளுமைகளைச் சிதைத்து விடுகின்றனர். இது தவறாகும்.
நபி(ஸல்) அவர்கள் சிறுவர்களைத் தோளில் சுமப்பார்கள். இது அவர்களுக்குப் பெரிதும் மகிழ்வளிக்கும்.
‘நபி(ஸல்) அவர்களது தோளில் ஹஸன்-ஹுஸைன் அவர்களிருவரும் இருந்தனர். இதைப் பார்த்த நான் ‘பாக்கியம் பெற்ற குதிரையில் சவாரி செய்கின்றீர்கள்!’ என்றேன். இது கேட்ட நபி(ஸல்) அவர்கள் ‘சவாரி செய்பவர்களும் பாக்கியம் பெற்றவர்கள்தாம்!’ எனக் கூறினார்கள்’ என உமர்(ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்.
(தபரானி, முஸன்னப் இப்னு அபீஷைபா)
நபி(ஸல்) அவர்கள் குழந்தைகளுடன் குழந்தையுணர்வுடன் பழகியிருப்பதை இந்த ஹதீஸும் உணர்த்துகின்றது.
அபூபுரைதா(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;
நபி(ஸல்) அவர்கள் குத்பா உரை நிகழ்த்தும் போது அவர்களது பேரர் ஹஸன்-ஹுஸைன்(ரழி) ஆகிய இருவரும் சிவப்பு நிற ஆடை அணிந்து தத்தித் தத்தி வந்தனர். உடனே நபி(ஸல்) அவர்கள் மிம்பரை விட்டும் இறங்கி இரு சிறுவர்களையும் சுமந்து மிம்பரில் அமர வைத்து விட்டு ‘அல்லாஹ் உண்மை உரைத்து விட்டான்’ என்று கூறி ‘நிச்சயமாக உங்களது செல்வங்களும், குழந்தைகளும் சோதனைதாம்’ (தகாபுன்:15) என்ற வசனத்தை ஓதினார்கள். பின்னர் ‘நான் இந்த எனது பிள்ளைகளைப் பார்த்தேன். அவர்கள் தத்தித் தத்தி வந்தனர். என்னால் அவர்களைச் சுமந்து இங்கே அமர்த்தும் வரை பேச்சைத் துண்டிக்காது பொறுமையாக இருக்க முடியவில்லை’ எனக் கூறினார்கள்.
(திர்மிதி, இப்னுமாஜா, அஹ்மத்)
குத்பாவைத் துண்டிக்கும் அளவுக்கு நபி(ஸல்) அவர்கள் அந்தச் சிறுவர்களுடன் நெருக்கமாகவும், அன்பாகவும் பழகியிருப்பதை இந்த ஹதீஸ் எடுத்துக் காட்டுகின்றது.
எமது பெற்றோர்களில் சிலர் சிறுவர்களுடன் நெருங்கிப் பழகக் கூடாது என்ற எண்ணத்தில் உள்ளனர். இது தவறாகும். நெருங்கிப் பழகுவதுடன் அவர்களுக்கு நேரிய-சீரிய வழியையும் காட்ட வேண்டும்.
அவர்களுடன் சேர்ந்து உண்பதும், ஒழுங்குகளைக் கற்றுக் கொடுப்பதும்:
குடும்பத்தில் அனைவரும் ஒன்றாக இருந்து உண்பது சிறந்த பண்பாகும். இந்தப் பண்புகள் இன்று அருகி விட்டன. அதனால் பாரிய ஒழுக்க வீழ்ச்சிகள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த காலங்களில் குடும்பத்தில் ஒருவர் இல்லாவிட்டாலும் உணவு உண்ணப்பட மாட்டாது. அவர் தேடப்படுவார். இப்போது அப்படி இல்லை. மேசையில் உணவு இருக்கும். அவரவர் எடுத்து உண்ண வேண்டியதுதான். இப்படி உண்ணும் போது பாசத்தையும், அன்பையும் பகிர்ந்துகொள்ள முடியாது. அடுத்தவர் தேவை அறிந்து விட்டுக் கொடுத்து வாழும் பண்பு ஏற்படாது. எனவே, குறைந்த பட்சம் இரவு உணவையாவது எல்லோரும் ஒன்றாக இருந்து உண்ணப் பழக வேண்டும். இந்தப் பழக்கம் உண்டாகி விட்டால் இளைஞர்கள் இரவு நேரங்களில் வீணே வீதிகளில் நேரத்தைக் கழிக்க மாட்டார்கள். ‘நான் வீட்டுக்குச் செல்லும் வரை வீட்டில் தாயோ, தந்தையோ உண்ண மாட்டார்கள்’ என்கிற உணர்வு அவனை வீட்டிற்கு விரட்டும்.
‘நான் எப்போது வேண்டுமானாலும் போகலாம். வீட்டு மேசையில் உணவிருக்கும். உண்டு விட்டு உறங்கலாம்’ என்ற உணர்வு இருப்பதால் வீதிகளில் இருந்து அரட்டை அடிக்கின்றனர். தப்புத்-தவறுகளைச் செய்கின்றனர். எனவே, ஒன்றாக இருந்து உண்ணும் அந்த நல்ல பழக்கத்தை மீண்டும் எமது குடும்பச் சூழலில் உருவாக்க வேண்டும்.
நபி(ஸல்) அவர்களது மனைவி உம்மு ஸலமா அவர்களுக்கு முதல் திருமணத்தில் பல குழந்தைகள் இருந்தனர்.
அவர்களில் ஒருவரான உமர் இப்னு அபீஸலமா(ரழி) அவர்கள் கூறுகின்றார்;
நான் நபி(ஸல்) அவர்களின் பராமரிப்பில் சிறு குழந்தையாக இருந்தேன். அப்போது சாப்பிடும் போது எனது கைகள் உணவு தட்டில் அங்கும் இங்குமாக உலாவின. அவ்வேளை நபி(ஸல்) அவர்கள் ‘மகனே! ‘பிஸ்மில்லாஹ்’ கூறுங்கள்! உங்களது வலது கையால் உண்ணுங்கள்! உங்களுக்கு முன்னால் இருப்பதை எடுத்து உண்ணுங்கள்!’ என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம், இப்னுமாஜா, அஹ்மத்)
எனவே, குழந்தைகளுடன் சேர்ந்து விளையாட வேண்டும். சேர்ந்து உண்ண வேண்டும். அதே வேளை நல்ல பழக்க-வழக்கங்களைக் கற்றுக் கொடுக்கவும் வேண்டும்.
சந்திக்கும் போது…
குழந்தைகளைப் பிரிந்து மீண்டும் சந்திக்கும் போது அவர்கள் பெரிதும் குதூகலமடைகின்றனர். தந்தையின் வரவை அவர்கள் எதிர்பார்க்கின்றனர். எமது மனதில் உள்ள குழப்பங்களையும், சிக்கல்களையும் ஒரு குப்பையில் போட்டு மூடி விட்டு மலர்ந்த முகத்துடன் அவர்களது மகிழ்வை அனுபவிக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும். சில தந்தையர்களின் வரவு பிள்ளைகளின் உள்ளத்தில் அச்சத்தையூட்டுகின்றது. இந்த நிலை இருக்கக் கூடாது. குழந்தைகளின் மலர்ந்த முகம் சிலவேளை உங்களது உளக் குமுறல்களைக் கூட அடக்கி விடும்.
குழந்தையின் சிரிப்பைப் பற்றி ஒரு கவிஞன் கூறும் போது, ‘பொன்னில் இன்பம் பொருளில் இன்பம் என்றே உள்ளம் மயங்கும். பூவைப் போலச் சிரிக்கும் உன்னைக் கண்டால் உண்மை விளங்கும்’ எனக் கூறிக் குழந்தைகளின் சிரிப்பின் மகிமையைப் பாடுகின்றான்.
நபி(ஸல்) அவர்களின் சிறிய தந்தை அபூதாலிப் அவர்களது மகன் ஜஃபர்(ரழி) அவர்கள் போரில் ஷஹீதானார்கள். அவர்களது குழந்தைகள் மீது நபி(ஸல்) அவர்கள் பெரிதும் பாசம் வைத்திருந்தார்கள்.
ஜஃபர்(ரழி) அவர்களது மகன் அப்துல்லாஹ் கூறுகின்றார்;
நபி(ஸல்) அவர்கள் பயணத்திலிருந்து வரும் போது அவர்களது குடும்பத்துச் சிறுவர்கள் அவர்களை வரவேற்கச் செல்வார்கள். ஒரு முறை அவர்கள் ஒரு பயணத்திலிருந்து வந்தார்கள். நான் அவர்களை முந்திச் சென்று சந்தித்தேன். என்னை நபியவர்கள் சுமந்து அவர்களது வாகனத்தின் முன்னால் வைத்துக் கொண்டார்கள். அதன் பின் ஹஸன் அல்லது ஹுஸைன் அவர்கள் வந்தார்கள். அவர்களை நபியவர்கள் தமக்குப் பின்னால் வைத்துக் கொண்டார்கள். எங்கள் மூவரையும் சுமந்துகொண்டு நபியவர்களது வாகனம் மதீனாவுக்குள் நுழைந்தது.
இந்த ஹதீஸில் நபி(ஸல்) அவர்களின் வருகையை நபியவர்களின் பேரப் பிள்ளைகள் மட்டுமன்றி அவர்களது உறவுக் காரர்களின் குழந்தைகள் நபியவர்களின் மனைவியரின் முன்னைய கணவருக்குப் பிறந்த குழந்தைகள் என அனைவரும் ஆவலுடனும், அன்புடனும் எதிர்பார்த்திருந்ததை எடுத்துக் காட்டுகின்றது. குழந்தைகளுடன் அன்பையும், பாசத்தையும் பகிர்வதற்கு நபி(ஸல்) அவர்கள் இதையும் ஒரு நல்ல வழிகாட்டுதலாகப் பயன்படுத்தியுள்ளார்கள் என அறிய முடிகின்றது.