குத்பாவுக்குச் செல்வதின் ஒழுங்கு
குத்பாவுக்குச் செல்வது, அங்கு அமர்வது தொடர்பிலும் இஸ்லாம் எமக்கு வழிகாட்டியுள்ளது. இவற்றில் பெரும்பாலானவற்றை நாம் இன்று மீறும் விதத்திலேயே நடந்து கொள்கின்றோம்.
1. நேரத்துடன் பள்ளிக்குச் செல்வது:
ஜும்ஆவுக்காக நேரகாலத்துடன் பள்ளிக்குச் செல்வது சுன்னாவாகும். இந்த சுன்னா இன்று பெரும்பாலும் மீறப்பட்டே வருகின்றது. ஜும்ஆ ஆரம்பிக்கப்படும் போது பள்ளியில் கொஞ்சம் பேர்தான் இருக்கின்றனர். இரண்டாம் ஜும்ஆ முடியும் தறுவாயில் பள்ளிக்கு வெளியிலும் மக்கள் நின்று கொண்டிருக்கின்றனர். இந்த வழிமுறை தவறானதாகும். இமாம் மிம்பருக்கு ஏறும் முன்னர் வந்து விட வேண்டும். இமாம் குத்பாவை ஆரம்பித்த பின்னர் வருபவர்களின் பெயர்களை மலக்குகள் அவர்களின் பதிவேட்டில் பதிய மாட்டார்கள்.
“இறைத்தூதர்(ச) அவர்கள் கூறினார்கள்: ஜும்ஆ நாள் (வௌ;ளிக்கிழமை) வந்துவிட்டால் வானவர்கள் (ஜும்ஆ தொழுகை நடக்கும்) பள்ளிவாசலின் நுழைவாயில்களில் ஒவ்வொரு வசாலிலும் (இருந்த வண்ணம்) முதன் முதலாக உள்ளே நுழைபவரையும் அடுத்தடுத்து உள்ளே நுழைபவரையும் (அவர்களின் பெயர்களை) எழுதிப் பதிவு செய்து கொண்டிருப்பார்கள். இமாம், உரை மேடையில் (உரையாற்றுவதற்காக) அமர்ந்துவிட்டால் (பதிவு செய்யும்) ஏடுகளைச் சுருட்டி வைத்துவிட்டு (அவரின் உபதேச) உரையைச் செவிமடுத்த வண்ணம் (உள்ளே) வருவார்கள். என அபூ ஹுரைரா(வ) அவர்கள் அறிவித்தார்.” (புகாரி: 3211, முஸ்லிம்: 850-24, இப்னு குஸைமா: 1769)
‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘ஜும்ஆ நாளில் கடமையான குளிப்புப் போல் குளித்துவிட்டுப் (பின்னர்) பள்ளிக்கு வந்தால் ஓர் ஒட்டகத்தை இறைவழியில் குர்பானி கொடுத்தவர் போலாவார். இரண்டாம் நேரத்தில் வந்தால் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். மூன்றாம் நேரத்தில் வந்தால் கொம்புடைய ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். நான்காம் நேரத்தில் வந்தால் ஒரு கோழியைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். ஐந்தாம் நேரத்தில் வந்தால் முட்டையைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். இமாம் பள்ளிக்குள் வந்துவிட்டால் வானவர்கள் ஆஜராகி போதனையைக் கேட்கிறார்கள்.”
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(வ)
நூல்: புகாரி: 881
இந்த நபிமொழி நேரத்தை ஐந்தாகப் பிரித்து முதலாம் நேரம் இரண்டாம் நேரம் என பிரித்துக் கூறுகின்றது. முதல் நபர் இரண்டாம் நபர் என்ற அடிப்படையில் கூறவில்லை. இந்த அடிப்படையில் நேரத்துடன் வரும் பலரும் இந்தப் பாக்கியத்தைப் பெறலாம்.
2. நடந்து செல்லுதல்:
மஸ்ஜித் அருகில் இருந்தாலும் வாகனங்களை எடுத்துக் கொண்டு ஜும்ஆவுக்குச் செல்லும் பழக்கம் இன்று பலரிடமும் உள்ளது. இதனால் வீணான வாகன நெருக்கடியும் அந்நிய மக்களுக்கு முஸ்லிம்கள் மீது வெறுப்பும் பொறாமையும் ஏற்படுகின்றது. ஜும்ஆவுக்கு நடந்து செல்வதே சிறந்ததாகும்.
“யார் வௌ;ளிக்கிழமை தினத்தில் குளித்து அதிகாலையிலேயே மஸ்ஜிதுக்குச் சென்று இமாமுக்கு மிக நெருக்கமாக இருந்து குத்பாவை செவிமடுக் கின்றாரோ அவர் எடுத்து வைத்த ஒவ்வொரு எட்டுக்கும் அந்த வருடத்தில் நோன்பிருந்து இரவில் நின்று வணங்கிய நன்மையைப் பெறுவார்;;.”
அறிவிப்பவர்: அவ்ஸ் இப்னு அவ்ஸ் அத்தகபீ(வ)
நூல்: அஹ்மத்: 16176, 21279, திர்மிதி: 496
(இந்த அறிவிப்பை இமாம் அல்பானி (ரஹ்) அவர்கள் ஸஹீஹானது என்று குறிப்பிடுகின்றார்கள்.)
இந்த அறிவிப்பு நடந்து செல்வதை சிறப்பிக்கும் விதத்தில் இருக்கின்றது. மற்றும் சில அறிவிப்புக்களில் வாகனத்தில் ஏறாமல் நடந்து சென்றால் என்று தெளிவாகவே இடம்பெற்றுள்ளது.
(நஸாஈ: 1384)
எனவே, இந்த அறிவிப்புக்களையும் நாட்டு நிலைமையையும் கவனத்திற் கொண்டு செயற்படுவது நல்லதாகும். ஜும்ஆ முடிந்து மக்கள் களைந்து செல்லும் போது பாரிய வாகன நெறிசல் ஏற்படுவதால் பிற சமூக மக்கள் எரிச்சலுடனும் முஸ்லிம்களிடம் நிறை வாகனங்கள் இருக்கின்றது என்று பொறாமையுடனும் நோக்கும் நிலையைப் போக்க வேண்டியுள்ளது.
3. இமாமுக்கு நெருக்கமாக இருத்தல்:
ஜும்ஆவுக்கு வந்தவர்கள் இமாமுக்கு நெருக்கமாக அவரது முகத்தை நேராகப் பார்க்கும் வித்தில் அமர்வது சுன்னாவாகும். இன்று நபிவழி ஜும்ஆ என தனித்தனியாக ஜும்ஆ ஆரம்பிக்கப் படுகின்றது. ஜும்ஆவுக்கு வரும் முதியோர்கள் முதல் சிறுர்கள், இளைஞர்கள் வரை எல்லா சுவர்களிலும் சாயந்து இருந்து கொள்கின்றனர். இமாம் மத்தியில் வெற்று இடத்தைப் பார்த்துத்தான் குத்பா ஓத வேண்டியுள்ளது. இது சுன்னாவுக்கு மாற்றமான வழிமுறையாகும். இமாமுக்கு முடிந்தவரை நெருக்கமாக இருக்க வேண்டும்.
ஏற்கனவே நாம் குறிப்பிட்ட ஹதீஸ் இமாமுக்கு நெருக்கமாக அமர வேண்டும் என்று கூறுகின்றது. எனவே, மூன்று புறமும் சுவர்களில் சாய்ந்து அமர்வதற்காக இமாமை விட்டும் தூரமாக அமர்வதைத் தவிர்க்க வேண்டும். இவ்வாறே கீழ் மாடியில் இடமிருக்கும் போது மேல் மாடியில் அமர்வதையும், உள் பள்ளியில் இடமிருக்கும் போது வெளிப் பள்ளியில் அமர்வதையும் அவசியம் தவிர்த்தாக வேண்டும்.
“ஜும்ஆவுக்கு சமுகமளியுங்கள். இமாமை நெருங்கி அமருங்கள். ஒரு மனிதர் இமாமை விட்டும் தூரமாகிச் சென்றால் அவர் சுவனத்தில் நுழைவதிலும் பிற்படுத்தப்படுவார்” என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸம்ரதுப்னு ஜுன்தூப்(வ)
நூல்: அபூதாவூத்: 1108, அஹ்மத்: 20118
(இமாம் அல்பானி (ரஹ்) அவர்கள் இதனை ஹஸன் தரத்தையுடையது என்று குறிப்பிடு கின்றார்கள்.)
இந்த அறிவிப்பு இமாமை விட்டும் இடம் இருக்கும் போதும் தூரமாகி அமர்வதைக் கண்டிக் கின்றது. எனவே, இதனை அனைவரும் கவனத்திற் கொண்டு செயற்படக் கடமைப்பட்டுள்ளோம்.
4. அமர்வதற்கு முன்னர் தஹிய்யதுல் மஸ்ஜித் தொழுதல்:
ஒருவர் பள்ளிக்கு இமாம் குத்பா ஓதும் போது வந்தாலும் இரண்டு ரக்அத்துக்கள் தஹிய்யதுல் மஸ்ஜித் தொழாமல் அமரக் கூடாது. சிலர் பள்ளிக்கு வந்ததும் அப்படியே அமர்ந்துவிடுகின்றனர். இது தவறாகும்.
“ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(வ) அறிவித்தார். ஜும்ஆ நாளில் நபி(ச) அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்த போது ஒருவர் வந்தார். உடனே நபி(ச்) அவர்கள் ‘நீர் தொழுது விட்டீரா?’ என்று கேட்டார்கள். அதற்கவர் ‘இல்லை” என்றார். ‘எழுந்து தொழுவீராக!” என்று கூறினார்கள்.”
(புகாரி: 930, முஸ்லிம்: 875-54)
எனவே, தஹிய்யதுல் மஸ்ஜித் தொழாமல் இருக்கக் கூடாது. இமாம் குத்பா ஓதும் போது வந்தால் மிகச் சுருக்கமாக இரண்டு ரக்அத்துக்கள் தொழுதுவிட்டு அமர வேண்டும்.
05. தொழுகைக்கு முன்னர் வட்டமாக அமர்ந்திருத்தல்:
வௌ;ளிக்கிழமை குத்பாவுக்கு முன்னர் பள்ளியில் கூட்டங்கள் நடாத்துவதற்காக வட்டமாக அமர்ந்திருப்பதை நபி(ச) அவர்கள் கண்டித்துள்ளார்கள்.
“நபி(ச) அவர்கள் பள்ளியில் விற்பதையும், வாங்குவதையும், அதில் கவிதைகள் பாடப்படுவதையும் வெளியில் காணாமல் போன பொருளை (அதிலிருந்து) தேடுவதையும் வௌ;ளிக்கிழமை தொழுகைக்கு முன்னர் வட்டமாக அமர்ந்திருப்பதையும் தடுத்தார்கள்.”
(நூல்: அஹ்மத் 6676)